2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

செந்தில் தொண்டமான் பிணையில் விடுதலை

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 08 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

கடந்த பொதுத்தேர்தல் காலத்தின்போது நுவரெலியா மாவட்டத்திலுள்ள கொத்மலைப் பிரதேசத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் எல்பட மாவட்ட நீதிவான் முன்னிலையில் கொத்மலை மற்றும் புசல்லாவை பொலிஸாரால் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்பு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நீதிமன்றில் ஆஜராகி பிணையில் விடுவிக்கப்பட்டவர்களில் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானும் ஒருவராவார். சந்தேக நபர்கள் தலா 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையிலும் 7500 ரூபாய் மற்றும் 5000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் விடுவிக்கப்பட்டனர். இவர்களை நவம்பர் மாதம் 3 ஆம் திகதி நீதிமன்றில் மீண்டும் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வருடம் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொத்மலை பிரதேசசபை உறுப்பினர் ஏ.அந்தனிராஜாவையும் அவரின் மனைவியையும் தாக்கி காயப்படுத்திய சம்பவம் மற்றும் பொதுத்தேர்தல் பிரசாரக் காலத்தில் இறம்படை மற்றும் முறுக்கு இறம்படை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்களைத் தாக்கி அவர்களின் உடைமைகளைச் சேதப்படுத்திய சம்பவம் ஆகியன தொடர்பில் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் மேற்படி சந்தேக நபர்களுக்கெதிராக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதாக கொத்மலைப் பிரதேசசபை உறுப்பினர் அந்தனிராஜ் தெரிவித்தார்.

அத்துடன், கடந்த பொதுத்தேர்தல் காலத்தின்போது புசல்லாவை எல்பட தோட்டத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றினை முடித்துக்கொண்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரத்தின் வாகனத் தொடரணியின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் புசல்லாவை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலேயே ஊவா மாகாணசபையின் அமைச்சர் செந்தில் தொண்டமான் உட்பட்ட சந்தேக நபர்கள் இன்று எல்பட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .