2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

கோதுமை மா விலையேற்றத்தால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மானியம் வழங்க வலியுறுத்தல்

Super User   / 2010 ஒக்டோபர் 18 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(க.கோகிலவாணி)

கோதுமை மா விலையேற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பெருந்தோட்டத்துறை மக்களுக்கு மானியம் வழங்கப்பட வேண்டுமென மலையக அரசியல் தலைவர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக இவ்வாரம் நாடாளுமன்றத்தில் தான் வலியுறுத்தவுள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பி. திகாம்பரம் தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.

அதேவேளை எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் இதற்கான மானியம் வழங்கப்படாவிட்டால் மக்களை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்துவோம் என தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் எஸ். சதாசிவம்,  ஜே.வி.பி. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சந்திரசேகரன் ஆகியோர் தெரிவித்தனர்.

தோட்டத் தொழிலாளர்களின் பிரதான உணவுப் பண்டமாக கோதுமை மா உள்ளது. இந்நிலையில் கோதுமை மாவின் விலை தொடர்ச்சியாக அதிகரிப்பதால்  அம்மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கேட்டபோதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

தற்போது அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள பி.திகாம்பரம் இது தொடர்பாக மேலும் கூறுகையில்,
"அதிகளவு வேலை செய்து குறைந்தளவு ஊதியம் பெறுபவர்களாக பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் உள்ளனர். கோதுமை மாவின் தொடர்ச்சியான விலையேற்றத்தால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெருந்தோட்டத் துறைத்துறையினருக்கு மானியம் வழங்குவதன் அவசியம் குறித்தும் அவர்களது சம்பளத்தை அதிகரிக்கக் கோரியும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தவுள்ளேன்" என்றார்.

அரிசி வாங்கவே வழியில்லை, அரிசி மா எப்படி வாங்குவது?:
எஸ்.சதாசிவம், தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர்


தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் கருத்துத் தெரிவிக்கையில்,

"பெருந்தோட்டத்துறை தொழிலார்கள் எடுக்கும் ஊதியம் அவர்களது வாழ்க்கைச் செலவிற்கே போதாததாக உள்ளது. இன்னும் பல இடங்களில் இதற்காக போராட்டங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இவ்வாறான நிலையில், அரசாங்கம் கோதுமை மாவின் விலையை தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பெருந்தோட்டத்துறை தொழிலாளிகள்தான்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் விரைவில் சமைத்து செல்லக் கூடிய உணவுப்பொருளாக கோதுமையை பயன்படுத்தி வருகிறார்கள். கோதுமை மாவின் விலையை அதிகரித்ததால் அவர்கள் பெரிதும் சிரமப் படுகிறார்கள். அரசாங்கம் 'அரிசி சாப்பிடுங்கள், அரிசி மா சாப்பிடுங்கள்' எனக் கூறிக்கொண்டு உள்ளது. அரிசி வாங்குவதற்கே அவர்களிடம் பணம் போதாமல் இருக்கும் போது அரிசி மாவை எங்கு வாங்குவார்கள்?

எனவே தோட்டத் தொழிலாளிகளுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்.

அதைவிட பெருந்தோட்டத்துறை மக்களுக்கு கோதுமை மா மானிய முறையில் வழங்கப்பட வேண்டும். இதனை அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் உடனடியாக அமுலுக்குக் கொண்டு வரவேண்டும். இவற்றை மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் மானிய முறை அமுலுக்குக் கொண்டு வரப்படாத பட்சத்தில் மக்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு உண்மை நிலையை எடுத்துக் கூறி நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம்" என்றார்.


தோட்டத் தொழிலாளர்களுக்கான மானிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்:
ராமலிங்கம் சந்திரசேகரன் - மக்கள் விடுதலை முன்னணி


மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான ராமலிங்கம் சந்திரசேகரன் இது தொடர்பாக கூறுகையில்,

"தொடர்ச்சியாக இந்த அரசாங்கம் பலதடவைகள் கோதுமை மாவின் விலையை உயர்த்திவிட்டது. இதனால் விசேடமாக கோதுமை மாவை நம்பி வாழும் பெருந்தோட்டத்துறை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோதுமை மாவினால் உற்பத்தி செய்யப்படும் ஏனைய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மஹிந்த சிந்தனையில் பெருந்தோட்டத்துறையினருக்கு அரிசி, கோதுமை மா, மண்ணெண்னெய் முதலியவற்றை மானியமாக வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதிகளை தந்தது. வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும்.

அத்தோடு, பெருந்தோட்டத்துறை மக்களின்  சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். அரசாங்கம் அடுத்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் இவற்றை உடனடியாக அமுலுக்குக் கொண்டு வரவேண்டும் என நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அரசாங்கம் இவற்றை அமுலுக்கு கொண்டு வராவிட்டால் அம்மக்களுக்கு உண்மை நிலைவரங்களை எடுத்துக் கூறி நாடுதழுவிய ரீதியில் பெரும் போராட்டத்தை முன்னெடுப்போம்" என்றார்.
 


  Comments - 0

  • MEERA ALI RAJHAI Tuesday, 19 October 2010 12:46 PM

    ஸ்ரீ ரங்கா பா.உ . அவர்கள் ஏற்கனவே இது தொடர்பாக நாடாளுமன்றில் உரை நிகழ்த்திவிட்டார், இவர்கள் இப்போது தான் முதலை கண்ணீர் வடிக்கின்றனர், பிரச்சினை இல்லை இப்போதாவது தாங்களும் மலையக அரசியல் வாதிகள் என்பதை நினைத்துப்பர்தமைக்கு எனது நன்றிகள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .