Kogilavani / 2021 ஜனவரி 08 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
அனைத்து தோட்ட வைத்தியசாலைகளையும் அமைச்சரவைப் பத்திரத்தினூடாக அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கது என்றுத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், அதேநேரம் அமைச்சரவைப் பத்திரத்தைத் தாண்டி தோட்ட சுகாதார முறைமையை தேசிய மயமாக்குவதற்கு பல பணிகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதற்கு சுகாதார மேற்பார்வைக் குழு அறிக்கையை கையில் எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தோட்ட சுகாதார முறைமை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சபையில் வழங்கிய உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டி, முன்னாள் எம்.பி திலகராஜ் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவித்துள்ள அவர், தோட்ட சுகாதார முறைமையை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் பொருட்டு, இதற்கு முன்னரும் இரண்டு அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
'2006 ஆம் ஆண்டு, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுகாதார அமைச்சராகவும், வடிவேல் சுரேஷ் எம்.பி பிரதி சுகாதார அமைச்சராகவும் இருந்த காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்தின் பேரிலேயே, 44 தோட்ட வைத்தியசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன. எனினும், அதில் 22 அளவே இப்போது செயற்பாட்டில் உள்ளபோதும் ஏனையவை செயலற்று முடங்கின. அதற்கு பின்னர் வேறு வைத்திய நிலையங்களுக்காக அந்த அமைச்சரவைப் பத்திர தீர்மானம் பயன்படுத்தப்படாததோடு அந்தப் பத்திரமும் மாயமாகிவிட்டது.
'அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு, முன்னாள் சுகாதார அமைச்சர் இராஜித்த சேனரத்ன காலத்தில் ஓர் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, அபிப்பிராயம் கோரலுக்காக ஏனைய அமைச்சுக்களுக்கு வழங்கப்பட்டபோது அந்தத் திட்டத்தை மறுத்த அமைச்சுக்களும் உள்ளன.
'இந்த நிலையிலேயே சுகாதரம் தொடர்பிலான பாராளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவராக செயற்பட்டு, திட்டத்துடன் தொடர்புடைய ஐந்து அமைச்சுகளையும் இணைத்து பெறப்பட்ட உடன்பாட்டு அறிக்கை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. எட்டாவது பாராளுமன்றில் அங்கம் வகித்த நான் எனது இறுதி உரை என அறிவித்து அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தின் ஊடாக அமைச்சரவை கவனத்துக்கு சமர்ப்பித்து விட்டு வந்தேன்.
'இன்று நாடாளுமன்றத்தில் வாய்மொழி வினா நேரத்தில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கேள்வி எழுப்பியமை வரவேற்கத்தக்கது. சுகாதார அமைச்சரின் பதிலும் வரவேற்கத்தக்கது.
'அதேநேரம் கடந்த கால அமைச்சரவைப் பத்திரங்களுக்கு என்ன ஆனது என்பதையும் வடிவேல் சுரேஷ் நன்கு அறிவார். எனவே நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையிலே உடன்பட்டவாறு அனைத்து அமைச்சுக்களையும் இணைத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். 500 தோட்ட வைத்திய நிலையங்களையும் அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர நிர்வாக மட்டத்தில் ஏற்பாடுகள் சீர் செய்யப்பட்டுள்ளன.
'நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத காலத்திலும் கூட கடந்த செப்டெம்பர் (2020) மாதம் அமைச்சின் அதிகாரிகளுக்கும் சிவில் சமூகத்தினருக்குமான கலந்துரையாடல் நுவரெலியவில் நடத்தியருந்தோம். கட்சி, அரசியல் பேதங்களுக்கு அப்பால், தோட்ட சுகாதார முறைமையை தேசிய சுகாதார முறைமைக்குள் கொண்டு வர அனைவரும் ஓரணியாக குரல் கொடுக்க முன்வர வேண்டும்' எனவும் தெரிவித்துள்ளார்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago