2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

’இழுபறிக்கு இடமளிக்க முடியாது; விரைவில் தீர்வு வேண்டும்’

Kogilavani   / 2021 ஜனவரி 08 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்  

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் இழுபறிக்கு இடமளிக்க முடியாது என்றுத் தெரிவித்துள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன், இதற்கு விரைவில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.    

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்குமாறு பல வழிகளிலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என்றும் நாளை மறுதினம், நுவரெலியா நகரிலும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

ஹட்டனில் இன்று (8) நடைபெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர், 

'பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான ஐந்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தையும் எவ்வித இணக்கப்பாடும் இன்றி, திகதி குறிப்பிடப்படாமலேயே  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் இழுபறி தொடர்கின்றது. அதற்கு இடமளிக்கமுடியாது. விரைவில் தீர்வு எட்டப்பட வேண்டும்' என்றார்.

'குறிப்பாக அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியை, பாதீட்டினூடாக பிரதமர் வழங்கினார். எனவே, இதற்கு அரசாங்க மட்டத்திலான தலையீடு அவசியம். கூட்டுஒப்பந்தத்தின் ஊடாக இதனை செய்ய முற்படுவது பொருத்தமற்றச் செயற்படாகும்.

'சம்பளம் மட்டுமல்ல, கூட்டு ஒப்பந்தத்தில் இதர பல நலன்புரி விடயங்களும் உள்ளன. எனவே, தொழில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் அந்த ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டிதான் வாதிடவேண்டும்.

'அரசாங்கத்தில் உறுதியளிக்கப்பட்ட அடிப்படை நாட் சம்பளம் என்ற உறுதிமொழியை நிறைவேற்ற அரசாங்கத்தின் முழுமையான பங்களிப்பு அவசியம் என்பதை நினைவூட்டுகின்றோம். ஆயிரம் ரூபாயை வழங்குவதற்கு சில கம்பனிகள் இணக்கம் வெளியிட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. அவ்வாறான கம்பனிகளிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

'அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படாவிட்டால் கம்பனிகளின் முகாமைத்துவ உரிமை மீள்பரிசீலனை செய்யப்படும் என்று பிரதமர் அறிவித்தார். இதன்படி இழுத்தடிக்கும் நிர்வாகங்களிடமிருந்து முகாமைத்துவத்தைப் பறித்து, முடியும் என்ற கம்பனிகளுக்கு வழங்கவேண்டும்.

'எங்களைப் பொருத்தவரை அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் அவசியம். அதற்கான அழுத்தங்கள் தொடர்ந்தும் பிரயோகிக்கப்படும். நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா நகரிலும் போராட்டம் முன்னெடுக்கப்படும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X