2025 ஜூலை 05, சனிக்கிழமை

கூட்டு ஒப்பந்த விவகாரம்; மீண்டும் புதிய முன்மொழிவு

Editorial   / 2019 ஜனவரி 11 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்  

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில், ஏற்கெனவே மூன்று முன்மொழிவுகளை முன்வைத்திருந்த முதலாளிமார் சம்மேளனமானது, நேற்று (10), மீண்டுமொரு புதிய முன்மொழிவை முன்வைத்தது.   

எனினும், இந்த முன்மொழிவு தொடர்பில் பரிசீலப்பதாகத் தெரிவித்து, நேற்றைய பேச்சுவார்த்தையிலிருந்து தொழிற்சங்கங்கள் வெளிநடப்புச் செய்தன.  

தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க ஆகியோர் மத்தியஸ்தம் வகிக்க, முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தப் பேச்சு, தொழில் திணைக்களத்தில், நேற்று (10) காலை 11 மணியளவில் ஆரம்பமானது.  

மத்தியஸ்தர்கள் இருவரும், முதலில் 22 கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, முதலாளிமார் சம்மேளனமானது, புதிய முன்மொழிவை முன்வைத்தது. இதில், மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுவதென்றும் 25 ரூபாய் என்ற அடிப்படையில், மூன்று வருடங்களுக்கும் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பதென்றும் முன்மொழியப்பட்டுள்ளன.   

அதாவது, முதல் வருடச் சம்பள அதிகரிப்பாக 625 ரூபாயும் இரண்டாம் வருடச் சம்பள அதிகரிப்பாக 650 ரூபாயும், மூன்றாம் வருடச் சம்பள அதிகரிப்பாக 675 ரூபாயும், முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், மூன்று வருடங்களுக்கு, ஊக்குவிப்புத் தொகையாக 140 ரூபாயும் வரவுக் கொடுப்பனவாக 80 ரூபாயும், விலைக் கொடுப்பனவாக 30 ரூபாயும், மேலதிகமாக எடுக்கும் ஒரு கிலோகிராம் கொழுந்துக்கு 45 ரூபாயும் என்ற யோசனையை, முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்தது.   

இதனையடுத்து, முதலாளிமார் சம்மேளனத்துக்கும் மத்தியஸ்தர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.  

இதன்பின்னர், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் மத்தியஸ்தர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல், நேற்று நண்பகல் 12 மணியளவில் ஆரம்பமானது.  

முதலாளிமார் முன்வைத்த யோசனைகளை, மத்தியஸ்தர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் முன்மொழிந்தனர். எனினும், இதனைப் பரிசீலிப்பதாகவும் இவ்விடயம் தொடர்பில், தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய பின்னர், தீரக்கமான முடிவை அறிவிப்பதாகவும், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர். இந்நிலையில், நேற்றைய பேச்சுவார்த்தையும், இணக்கப்பாடின்றி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.  

கூட்டுஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்களான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம் ஆகியோரும் மத்திய மாகாணத்தின் முன்னாள் தமிழ்க் கல்வி அமைச்சர் எம்.ராமேஸ்வரன் ஆகியோரும், இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் யூனியன் சார்பாக இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷும், பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பாக எஸ்.இராமநாதனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .