2026 மே 15, வெள்ளிக்கிழமை

“ஜனாதிபதியை பேரினவாதிகள் இயக்குகின்றனர்”

Editorial   / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் ஜனாதிபதியை பேரினவாதிகள் இயக்குகின்றனர் என்று தெரிவித்த கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், சாய்ந்தமருது நகரசபை விவகாரம் இதனை பறைசாட்டுவதாகவும் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள்  முன்னணியின் கண்டி மாவட்ட அலுவலகத்தில், கட்சி செயற்பாட்டாளர்களுடன், நேற்று (20) முற்பகல் இடம்பெற்ற  சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷ தங்கம், சிங்கம், முதுகெலும்புள்ள தற்துணிவான செயல்வீரன் என்றெல்லாம் சிலர் துதிபாடிவந்தனர் என்றும் ஆனால், தான் முதுகெலும்பற்ற அரசியல்வாதி என்பதை, சாய்ந்தமருது நகரசபை விவகாரத்தில் ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், சாய்ந்தமருது நகரசபை உருவாக்கம் தொடர்பில், ஜனாதிபதி தேர்தலின்போது ராஜபக்ஷ தரப்பு உறுதியளித்திருந்தது என்றும் அந்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாகவும் அதற்கு, சாய்ந்தமருது மக்களும் மகிழ்ச்சி வெளியிட்டனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆனால், வலது கையில் கொடுத்துவிட்டு இடதுகையால் பறித்தெடுப்பதுபோல், குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்வதற்கு, ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார் என்றம் அது தொடர்பில், அரசாங்கம் பல கதைகளை கூறினாலும் அவை அனைத்தும் அம்புலிமாமா கதைகள்போலவே உள்ளன என்றும் விமர்சித்தார். .

“ஒரு சில பேரினவாதிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து, அவர்களைத் திருப்திபடுத்துவதற்காகவே, வர்த்தமானி அறிவித்தல் இரத்துசெய்யப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. எனவே, நாட்டின் ஜனாதிபதியை ஒரு சில பேரினவாதிகளே இயக்குகின்றனர், அவர்களின் கட்டளைகளின் படியே அவர் செயற்படுகின்றார் என்ற சந்தேகம் எம்முள் ஏற்படுகின்றது.

“அதுமட்டுமல்ல நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னிச்சையாக, தைரியமாக முடிவெடுக்கும் நிலையில் தான் இல்லை என்பதையும் ஜனாதிபதி தற்போது ஏறத்தாழ உறுதிப்படுத்திவிட்டார்.

“இலங்கையில் வாழும் சிறுபான்மையின மக்களுக்கு உரிமை அரசியலை வழங்கமாட்டோம் என்பதை ராஜபக்ஷக்கள் பலதடவைகள் உறுதிப்படுத்திவிட்டனர். எனினும், அவர்களின் பின்னால் ஓடி சலுகைகளுக்காக தமிழ்பேசும் மக்களின் வாக்குகளை விலைபேசும் தரகர்கள் இருக்கவே செய்கின்றனர். எனவே, பொதுத்தேர்தலில் சிந்தித்து தமது வாக்குரிமையை பயன்படுத்துமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். இது தொடர்பில் நீங்களும் மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

“அதேவேளை, சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவேண்டும். அவர்களுக்காக எமது குரல் ஓங்கி ஒலிக்கும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .