Editorial / 2026 மே 01 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா நகரின் பனிமூட்டத்திற்குப் பின்னால், அந்தத் தேயிலைத் தோட்டத்து லயன் குடியிருப்புகளில் எப்போதும் ஒரு பரபரப்பு இருக்கும். ஆனால், இம்முறை அந்தப் பரபரப்பு உழைப்பைப் பற்றியது அல்ல; ஊரே வாயடைத்துப் போன ஒரு 'மர்ம' ஓட்டத்தைப் பற்றியது.
அந்தத் தோட்டத்தில் ஒரு குடும்பப் பெண் முன்னின்று ஒரு பணச் சீட்டை ஆரம்பித்தார். மாதாந்தம் 20 ஆயிரம் ரூபாய் வீதம், பத்து பேர் சேர்ந்து 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான சீட்டு அது. உழைக்கும் மக்களின் சேமிப்பு ஆசை அது. அந்தப் பத்து பேர் கொண்ட குழுவில், இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான ஒரு ஆணும், அதேபோல் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணும் உறுப்பினர்களாக இருந்தனர். ஏனைய உறுப்பினர்களும் மனைவி, பிள்ளைகள் இருக்கின்றனர்.
சீட்டு ஆரம்பமானதும், குலுக்கலில் தெரிவு இடம்பெற்றது. அந்த இரண்டு குழந்தைகளின் தந்தைக்கு இரண்டாவது சீட்டு கிடைத்துவிட்டது. இரண்டாவது ஆளாக அந்த 2 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டார். கையில் பெரிய தொகை கிடைத்ததும் அவர் காட்டிய வேகம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
அடுத்தடுத்த மாதங்கள் நகர, கடந்த ஏப்ரல் மாதத்துக்கான சீட்டுப் பணம் அந்தக் குழுவிலிருந்த மற்றைய இரண்டு குழந்தைகளின் தாய்க்கு கிடைத்தது. ஒருவருக்குப் பணம் கிடைத்தது மகிழ்ச்சி என்றால், மற்றொருவருக்குப் பணம் கிடைத்தது திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்குமோ என்றுஎவருக்கும் அப்போது தெரியவில்லை.
இன்னும் ஆறு மாதங்களுக்குச் சீட்டுப் பணத்தைக் கட்ட வேண்டிய பொறுப்பு இருவருக்கும் இருந்தது. ஆனால், நுவரெலியாவின் குளிரை விடவும் அதிர்ச்சியான செய்தி ஒன்று தோட்டத்தைப் உலுக்கியது. இரண்டாவதாக சீட்டுப் பணத்தைப் பெற்ற அந்தத் தந்தை, தன் மனைவியைக் கைவிட்டுவிட்டு திடீரென மாயமானார். அதே நேரத்தில், ஏப்ரல் மாதச் சீட்டுப் பணத்தைப் பெற்ற அந்தத் தாயும் தன் இரு பிள்ளைகளையும் தவிக்கவிட்டுவிட்டு காணாமல் போனார்.
"பணத்தைக் கண்டதும் பாசம் பறந்து போய்விட்டதா?" என்று ஊர்மக்கள் பேசிக்கொள்கின்றனர். கையில் பணம் கிடைத்த வேகத்தில், தங்கள் வாழ்க்கைத் துணைகளையும் ஈன்ற பிள்ளைகளையும் நடுத்தெருவில் விட்டுவிட்டு இருவரும் 'ஜோடியாக' ஓடிவிட்டதாகத் தோட்டமே பரபரக்கிறது.
பணத்திற்காகப் பெற்ற பிள்ளைகளைக் கூட மறந்துவிட்டு ஓடிய இந்தச் சம்பவம், நுவரெலியா நகருக்கு அண்மித்த அந்தத் தோட்டத்தில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சீட்டுப் பணம் சிலருக்குச் சேமிப்பு, ஆனால் இந்த இருவருக்கோ அது தப்பித்து ஓடுவதற்கான 'டிக்கெட்' கட்டணமாக மாறிவிட்டது! எனினும் சீட்டுப்பிடித்த அக்காவோ, மிஞ்சிய பணத்தை கட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago