R.Maheshwary / 2021 ஒக்டோபர் 28 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
தலவாக்கலை பகுதிகளிலுள்ள 16-18 வயது பிரிவு மாணவர்களுக்கு இன்று (28) தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் போது, பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அரசியல் தலையீட்டுக்கும் அது வழிவகுத்தது. இறுதியில் ஒரு மணிநேர ஸ்தம்பிதத்தின் பின்னரே தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பமானது.
தலவாக்கலை தமிழ்த் தேசியக் கல்லூரி, தலவாக்கலை சுமன தேசியக் கல்லூரி, பாரதி தமிழ் மகா வித்தியாலயம், வட்டகொடை தமிழ் மகா வித்தியாலயம், வட்டகொடை சிங்கள மகா வித்தியாலயம், சென்கிளயார் தமிழ் மகா வித்தியாலயம், கிரேட்வெஸ்டன் தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த 16-18 வயது பிரிவு மாணவர்களுக்கு இன்று (28) சுமன தேசிய கல்லூரியில் 'பைசர்' தடுப்பூசி ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பாடசாலையை விட்டு இடைவிலகிய, சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றியவர்கள் உட்பட சுமார் ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தடுப்பூசியை பெறுவதற்கு மாணவர்கள் பெற்றோர்கள் சகிதம் வந்திருந்தனர். சீருடை மற்றும் சாதாரண ஆடைகளில் மாணவர்கள் வந்திருந்தனர்.
இதன்போது, சீருடை அணிந்து வந்த மாணவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்படும் என கொட்டகலை சுகாதார பிரிவுக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அங்கு சாதாரண ஆடைகளில் வந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இது தொடர்பில் தலவாக்கலை, லிந்துலை நகர சபை தலைவருக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவரும், கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர்கள் சிலரும் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு நடத்தினர். எனினும், தடுப்பூசி ஏற்றப்படவில்லை.
இறுதியில் சம்பவ இடத்துக்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், மத்திய மாகாண சுகாதார பணிப்பாளருடன் தெலைபேசி மூலம் கலந்துரையாடி, அனுமதி பெற்றுக்கொடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .