2026 ஜனவரி 21, புதன்கிழமை

’நாட்டு மக்களின் உயிரை இலட்சத்திலும் கோடியிலும் கணக்கிடுகின்றனர்”

Kogilavani   / 2021 மே 24 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டு மக்களின் உயிரை இலட்சத்திலும் கோடிகளிலும் கணக்குப்பார்க்கும் நிலையிலேயே, இன்றைய அரசாங்கம் உள்ளதென தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் சாடியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு மிக மோசமாக உள்ளது என்றும் இந்நிலைமைக்கு சரியான நேரத்தில் சரியான தீர்மானங்களை அரசாங்கம் எடுக்கத் தவறியமையே காரணம் என்றும் சாடினார்.

விமான நிலையத்தைக் கட்டுப்பாடின்றி திறந்தமை, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் வர அனுமதித்தமை, சித்திரைப் புத்தாண்டில் கட்டுப்பாடுகளை தளரவிட்டமை, தடுப்பூசி ஏற்றுவதில் தாமதம் போன்றவையே நாட்டில் தற்போதைய நிலைமைக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“நாட்டின் தற்போதைய நிலையில், மூன்றாவது அலையைத் தாண்டி, நான்காவது அலை ஏற்படும் என ஊகிக்கப்படுகின்றது. இந்நிலைமையைத் தடுக்க நாட்டிலுள்ள சுகாதார துறை சார்ந்த பிரதான நான்கு அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளன. நாட்டைக் குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முடக்குமாறும் மக்கள் நடமாட்டத்தை முழுமையாகத் தடுக்குமாறும் கோரியுள்ளனர். இதுவே சர்வதேச ரீதியான சில ஆய்வுகளின் ஆலோசனையாகவும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதியோ கொவிட் தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியோ இதற்குச் செவிசாய்ப்பதாக இல்லை.

“இதற்குப் பதிலளிக்கும் வகையில், நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், நாட்டை ஒரு நாளைக்கு முடக்கினால் 140 கோடி ரூபாய் நாட்டம் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு பார்த்தால்கூட 14  நாட்களுக்கு 1960 கோடி ரூபாய் நட்டம் ஏற்படும். அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீனி மோசடியில் மட்டும் அரசாங்கத்துக்கு 1950 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டமை என்பது அனைவருக்கும்  தெரியும்.

“தற்போதைய அரசாங்கம், நாட்டு மக்களின் உயிர்களை அலட்சியமாக பார்க்கும் அரசாங்கமாக மாறியுள்ளது. இலட்சங்கள், கோடிகளை எப்போதும் உழைத்துக்கொள்ள முடியும். மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் நாட்டின் பொருளாதாரத்தை எப்போதும் மேம்படுத்திக்கொள்ள முடியும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X