2026 மே 07, வியாழக்கிழமை

பிரிடோ நிறுவனம் களத்தில் இறங்கியது

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீ சண்முகநாதன்    

கொரோனா தொற்றின் பாதிப்பு தொடர்பில் பெருந்தோட்ட மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாட்டில், பிரிடோ நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பெருந்தோட்ட மக்களைப் பாதுகாக்க வேண்டியது முதன்மையான சமூகக் கடமை என்றும் எனவே, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் "பிரிடோ" நிறுவனம் அதன் பணியாளர்கள், முன்பள்ளி ஆசிரியைகள், சமூக அபிவிருத்திக் குழுக்களைக் களம் இறக்கியுள்ளதாகவும் நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் எஸ்.கே.சந்திரசேகரன் தெரிவித்தார்.

ஹட்டன் "டைன் அன் ரெஸ்ட்" விருந்தகத்தில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கொரோனா வைரஸ் தாக்கம், நாட்டை ஏறக்குறைய ஸ்தம்பித நிலைக்குக் கொண்டுவந்துள்ளது என்றும் அரசு, தனியார் நிறுவனங்கள் விடுமுறை உட்பட சமய வழிபாடுகளுக்காக மக்கள் கூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மிகவும் நெருக்கமான குடியிருப்பு காரணமாகவும் மக்கள் மற்றையப் பகுதிகளைப் போல முழுமையான சுகாதாரப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க முடியாத சூழல் இருப்பதன் காரணமாகவும் அரசு சுகாதார சேவை முழுமையாக இன்னமும் பெருந்தோட்டத்தை வந்தடையாதச் சூழ்நிலையிலும் ஒரு தோட்டத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால்கூட அது மிகவும் பாரதூரமான நிலைமையை ஏற்படுத்திவிடும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

எனவே அவரை தனிமைப்படுத்துவதற்கான வாய்ப்பு பெருந்தோட்டப் பகுதியில் மிகவும் குறைவாகவே  உள்ளது என்றும்  இந்தப் பின்னணியில், தொற்று ஏற்படக்கூடிய அதி ஆபத்தான பகுதியாகப் பெருந்தோட்டப் பகுதியை எவரும் கருத்திற்கொண்டு கருத்துத் தெரிவிக்காதது கவலைத் தரும் விடயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுவிடயத்தில், அரச இயந்திரம் பெருந்தோட்ட பகுதியில் முழுமையாகத் தலையிட்டு செயற்படக்கூடிய சாத்தியம் மிகவும் குறைவாகக் காணப்படும் பின்னணியில், பெருந்தோட்ட பகுதிகளில் பரந்தளவிலான சுகாதார விழப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பிரிடோ, சமூக அபிவிருத்திக் குழுக்களையும் முன்பள்ளி ஆசிரியைகளையும் களமிறக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்பள்ளிகளை நடத்த முடியாத சூழல் காணப்பட்டாலும் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி முன்பள்ளி ஆசிரியைகள் வீடுகளை அடிப்படையாக கொண்ட கல்வி முறையைப் பின்பற்றி அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு விஜயம் செய்து பிள்ளைகளின் கல்வியையும் சுகாதாரத்தையும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு பெற்றோருக்கு தற்போதைய சூழலில் எடுக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிப்பர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .