Kogilavani / 2021 ஜனவரி 20 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
கண்டி மடுல்கலை நெல்லிமலை தனியார் தோட்ட மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பில், பெருந்தோட்டப் பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று, தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்படித் தோட்டத்தில் தொழிலாளர் ஒற்றுமை சீர்குலைந்துள்ளதால், அங்கு பாரியளவிலான முரண்பாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
கண்டி மடுல்கலை நெல்லிமலை தனியார் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள், இரண்டு வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற நிலையில், தொழிலாளர்களும் இரண்டு வருடங்களாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தோட்ட நிர்வாகமானது, தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பவற்றை வழங்காது, தொழிலாளர்களை ஏமாற்றிவருவதால் தொழிலாளர்கள் தமக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் வரை, பணிக்குத் திரும்புவதில்லை என்று தெரிவித்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு சிலருக்கு மட்டும் சலுகைகளை வழங்கி, தோட்ட நிர்வாகமானது அவர்களை தொழிலுக்கு அமர்த்தியுள்ளது.
இவ்வாறு தோட்டத்தில் பணிப்புரிபவர்கள் தோட்ட நிர்வாகத்துச் சார்பானவர்களாக செயற்பட்டு வருகின்றனர் என்றும் ஏனைய தொழிலாளர் குடும்பங்கள், நிர்வாகப் பழிவாங்கல்களுக்கு உட்பட்டு வருகின்றனர் என்றுத் தெரிவிக்கப்படுகிறது.
இதனை மயப்படுத்தி தொழிலாளர்களுக்கு, இடையே முறுகல் நிலை தொடர்ந்து வருகிறது.
பொங்கல் தினத்தன்று, மேற்படித் தோட்டத்தில் பஜனை ஊர்வலம் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த பஜனை ஊர்வலமானது தோட்டத்தில் பணிப்புரிபவர்களின் வீடுகளுக்கும் மட்டும் சென்றதால், பஜனை ஊர்வலம் செல்லாத வீடுகளைச் சேர்ந்தவர்கள் பஜனைக் குழுவினரிடம் முறுகலில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த நால்வர், கண்டி, மடுல்கலை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
எனவே, தோட்ட மக்களுக்கு இடையே, தோட்ட நிர்வாகமானது முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளதாகவும் இது தொடர்பில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
23 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
3 hours ago