2025 டிசெம்பர் 01, திங்கட்கிழமை

மக்களுக்கு பாதுகாப்பான குடியிருப்புகளை வழங்க நடவடிக்கை

Janu   / 2025 டிசெம்பர் 01 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாணத்தில் அதிக ஆபத்தான குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை விரைவில் பாதுகாப்பான குடியிருப்புகளில் குடியமர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன  தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக ஆபத்தான குடியிருப்புக்களின் நிலைமை குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று  ஞாயிற்றுக்கிழமை (30) அன்று இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே ஆளுநர் இவ்வாறு கூறினார்.

பிரதி அமைச்சர்  சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின்  கோரிக்கைக்கு அமைய இரத்தினபுரி மாவட்ட செயலகத்தினால் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை(30) வரை இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,770 ஆகும்.

அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் சுமார் 14,448 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

முழுமையான 3 குடியிருப்புகள் சேதமடைதுள்ளதாகவும், பகுதியளவில்  996 குடியிருப்புகள் சேதமடைதுள்ளதாகவும் மற்றும் 4 வர்த்தக நிலையங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும்  பதிவாகியுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் இம்மாவட்டத்தில் மலையக தோட்ட பகுதிகளைச் சேர்ந்த 339 குடும்பங்கள்   பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலான குடும்பங்கள் அதிக ஆபத்தான குடியிருப்புகளில் வசிப்பவர்கள் ஆவர்.

அவர்களை மீண்டும் அந்த  குடியிருப்புகளில் குடியமர்த்த முடியாதமையால், வேறு தற்காலிக இடங்களில் குடியமர்த்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன்  மலையக தோட்ட குடியிருப்புகளின் அருகில் அபாயமான நிலையில் உள்ள தேக்கை, கினி கூறு, தென்னை, பலா உள்ளிட்ட மரங்களை அகற்றுவதற்கும் இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும் மலையக தோட்ட மக்களை மையமாகக் கொண்டு அமைக்கப்படும் சுகாதார வசதிகள், வீதிகள், முன்பள்ளிகள்,  பராமரிப்பு நிலையங்கள் போன்றவற்றுக்கு தமது அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக தோட்ட நிறுவனங்கள்  தெரிவித்தன.

இது தவிர இந்திய அரசாங்கத்தினால் மலையக தோட்ட மக்களுக்காக இரத்தினபுரி மாவட்டத்தில் 263 குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்,

மலையக தோட்ட மக்களுக்காக அவர்களின் சொந்தமான காணியில் குடியிருப்பு அமைக்கும்  வேலைத்திட்டம் ஒன்றையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன, முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் சப்ரகமுவ  மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளருமான புஷ்பகுமார திசாநாயக்க, குருவிட்ட பிரதேச சபையின் தலைவர் விகசித புஷ்பசூரிய, இரத்தினபுரி  மாவட்ட மேலதிக செயலாளர் அமில சுரஞ்சித் விஜேரத்ன மற்றும்  பலாங்கொடை காவத்தை, புஸ்ஸல்ல உள்ளிட்ட பல தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சிவா ஸ்ரீதரராவ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X