2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’மலையக மக்களின் காணி, வீட்டுரிமைக்கு தேசியக் கொள்கை தேவை’

Gavitha   / 2020 ஒக்டோபர் 18 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பெருந்தோட்டங்களில் தொழில் செய்யும், பெருந்தோட்டங்களில் தொழில் செய்யாமல் அங்குள்ள குடியிறுப்பில் வாழும் மலையக மக்களுக்கு, காணி மற்றும் வீட்டுரிமை வழங்குவது தொடர்பில், தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் தேசியக் கொள்கையொன்றை ஏற்படுத்த வேண்டும் என, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மலையக பிராந்திய செயலாளரும் மாத்தளை உக்குவளை பிரதேச சபையின் உறுப்பினருமான டேவிட் சுரேன் தெரிவித்துள்ளார்.

இராகலையில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில், நேற்று (17) மாலை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து​கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மலையக மக்கள் தற்போது வசித்துவரும் பாதுகாப்பற்ற குடியிருப்பின் பாங்கு மாற்றப்பட்டு, கிராமிய வீடமைப்புத் திட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும் என்ற​ கோரிக்கையை, சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு உள்ளிட்ட புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போதே முன்வைத்தது என்று அவர் கூறினார்.

​அத்துடன், பெருந்தோட்டங்களில் கிராமிய வீடமைப்புத் திட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும் என்று போராடி வந்த சமூக அமைப்புகளின் போராட்டத்துக்கும் தாங்கள் கைக்கோர்த்து வந்ததாகவும் அதன் விளைவாக, கடந்த நல்லாட்சி அரசாங்கக் காலத்தில், பெருந்தோட்டங்களில் தொழில் செய்பவர்களுக்கு மாத்திரம் வீட்டுத்திட்டம் அடிப்படையில், குறிப்பிட்ட அளவிலான வீடுகள் அமைக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

ஆனால், இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, மலையக மக்களின் வீட்டுத்திட்டம் பற்றி, இதுவரை எந்தவொரு முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

அதேநேரத்தில் அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக இருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்களின் வீடமைப்பு தொடர்பில் கொண்டிருக்கும் தற்போதைய நிலைப்பாட்டை, அரசாங்கத்துக்கு எவ்வாறாக அறிவித்துள்ளது என்பது கேள்வியாகவே உள்ளதாகவும் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும் மலையக மக்களின் காணி உரிமை, வீட்டுரிமை தொடர்பில் அரசாங்கமும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸினர் வாய்திறக்காது, அறிக்கைகளை விடுத்து வருவது, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றுவதாக கருதக்கூடியது என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X