2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

முன்மொழிவுகளை வெளியிட்டார் அனுஷா

Kogilavani   / 2021 ஜனவரி 10 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை செய்துகொள்ளப்படவுள்ள கூட்டுஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் முன்மொழிந்துள்ள சட்டத்தரணியும் சந்திரசேகரன் மக்கள் முன்னணி, அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் பொதுச் செயலாளருமாகிய அனுஷா சந்திரசேகரன், சம்பள உயர்வுக்கு அப்பால், தொழிலாளர்கள் முகம்கொடுக்கும்

பிரச்சினைகளுக்குத் தீர்வு தராத எந்த ஒரு கூட்டு ஒப்பந்தமும், நிச்சயமாக அடிமை சாசனமாகவே அமையும் என்றும் தெரிவித்துள்ளார். 

இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,  கூட்டு ஒப்பந்தம் என்பது, சம்பள உயர்வுவோடு மாத்திரம் தொடர்புப்பட்டதல்ல என்றும் தொழிலாளர்கள் முகம்கொடுக்கும் பல்வேறுப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் அதில் உள்ளடக்கப்படல் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

'ஒவ்வொரு தோட்டங்களிலும், எமது மக்கள் வௌ;வேறு விதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். ஒரு பிரச்சினை தீர்க்கப்பட்டால் வேறு ஒரு பிரச்சினை அதைவிடவும் பயங்கரமாக உருவாகிவிடுகிறது. கொழுந்து நிறுவையில் இருந்து ஓய்வூதியம் பெறும் வரையிலும் நிம்மதி இல்லாத வாழ்க்கையே வாழ்ந்துவருகிறார்கள்.

'டிஜிட்டல் முறையில் 100 கிராம் குறைந்தாலும் வேலை நாள் குறைவு போன்ற நெருக்கடிகளால் தொழிலாளர்கள் அர்த்தமின்றி வஞ்சிக்கப்படுகின்றார்கள். 
'இதற்கு எதிரான சரத்துக்களும் கூட்டுஒப்பந்தத்தில் அழுத்தமாக இணைக்கப்பட வேண்டும். குளவிக் கொட்டுதலாலும் வனவிலங்குகளின் தாக்குதாலும், வேறு விபத்துகளாலும் வேலை நேரத்தில் மரணிக்கும் தொழிலாளர்களுக்கு, உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும். 

'அதேபோன்று அவர்கள், சிகிச்சை முடிந்து மீண்டும் கடமைக்குத் திரும்பும் உடற்தகுதியை பெறும் வரையிலான காலங்கள், மருத்துவ விடுமுறை நாட்களாகக் கணிக்கப்பட வேண்டும், அதற்கான நட்டஈடுகளும் சரியான முறையில் வழங்கப்பட வேண்டும்.

'வறட்சி காலங்களில் ஒரு நாள் பெயருக்காக எடுக்கப்பட வேண்டிய கொழுந்தின் நிறை குறைக்கப்படல் வேண்டும். தற்போது வழங்கப்படும் 500 கிராம் தேயிலைத் தூள், தரமானதாக ஒரு கிலோவாக அதிகரிக்கப்பட வேண்டும்.

'உரிய விசாரணை இன்றி அல்லது ஆகக் குறைந்தது ஏழு நாள் அவகாசம் இன்றி தொழிலாளர்களுக்கு வேலையை நிறுத்தக் கூடாது.

'தொழிலாளர்களுக்கு எதிராக நிர்வாகமும் நீதிமன்றமும் இரண்டு தண்டனைகள் வழங்கக்கூடாது. தற்போது ஒரு குற்றத்துக்காக நிர்வாகமும் தண்டிக்கிறது நீதிமன்றமும் தண்டிக்கிறது. நிர்வாகம் தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு முன்னர் அவர்கள் சார்ந்த தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். 

'தோட்டங்கள் காடாக்கப்படாமல் உரிய முறையில் பராமரிக்கப்படல் வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X