2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மாகாண சபையின் தீர்மானங்களில் ‘தனிக்கட்சி தலையிடுகிறது’

Kogilavani   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்   

“மத்திய மாகாண சபையில் அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து தீர்மானிக்கும் விடயங்களை, ஒரு கட்சி தனிப்பட்ட முறையில் அதனை மாற்றி அமைக்கின்றது என்றால், ஏன் வீணாக மாகாண சபையைக் கூட்ட வேண்டும். அதற்காக ஏன் பணம் செலவிட வேண்டும்? மாகாண சபைக்கு இருக்கின்ற கௌரவம்தான் என்ன?” என்று, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம் மற்றும் முத்தையா ராமசாமி ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.  

மத்திய மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம், மத்திய மாகாண சபைத் தலைவர் நிமலசிறி தலைமையில், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள மாகாண கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.  
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.  

“ஆசிரியர் உதவியாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கி, அவர்களின் தரத்தை உயர்த்தி, அவர்களை ஆசிரியர்களாக உள்வாங்க வேண்டும். அதற்காக, பாடசாலைகளில் இருக்கின்ற ஆசிரியர் உதவியாளர்கள் அனைவரையும் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளுக்கு அனுப்ப முடியாது.  

எனவே, அவர்களுக்கு தொலைக் கல்வி மூலம், பயிற்சிகளை வழங்க வேண்டும் என்றத் தீர்மானம், மாகாண சபையில் எடுக்கப்பட்டது.  

ஆனால், அந்தத் தீர்மானத்துக்கு முரணாக, ஒரு கட்சி செயற்பட்டு வருகின்றது. “ஆசிரியர் உதவியாளர்கள் அனைவரையும் பயிற்சிக் கலாசாலைக்கு அனுப்புங்கள், பாடசாலைகளில் ஆசிரியர்கள் இல்லாவிட்டால் பரவாயில்லை” என்று அக்கட்சியின் உறுப்பினர்கள் கூறுகின்றனர். 

அப்படியானால், பாடசாலைகளை இவர்கள் மூடச்சொல்கின்றார்களா? தொலைக் கல்வியை ஆரம்பிப்பதன் மூலம் ஆசிரியர் உதவியாளர்கள் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கின்ற அதேவேளை, சனி, ஞாயிறு தினங்களில் தங்களுடைய பயிற்சிகளை நிறைவு செய்து கொள்ள முடியும்.  
எனவே, ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள், சமூக ரீதியாகவும் எமது பிள்ளைகளையும் மனதில் கொண்டு, தங்களுடைய பயிற்சிகளைத் தெரிவு செய்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை அவர்களிடம் நான் வைக்கவிரும்புகின்றேன்.  

ஏற்கெனவே, பாடசாலைகளை அரசியல்மயமாக்கி கல்வியின் தரத்தை இல்லாமல் செய்தவர்கள் மீண்டும் அந்த நிலையை ஏற்படுத்துவதற்கு தயாராகின்றார்கள்.  

அவ்வாறானவர்கள் தொடர்பாக மக்கள் கவனமாக இருக்க வேண்டும். எமது சமூகத்தைச் சார்ந்தவர்களே எமது சமூகத்தை மட்டம்தட்டத் தொடங்கிவிட்டார்கள்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .