2026 ஜனவரி 21, புதன்கிழமை

விபத்தில் தொழிலாளர்கள் பாதிப்பு; வழக்குத் தொடர நடவடிக்கை

Kogilavani   / 2021 மே 23 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இராகலை சென்லெனாட்ஸ் நடுக்கணக்குப் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற விபத்துத் தொடர்பில் பொலிஸ் முறைப்பாட்டுடன் சிவில் வழக்கு ஒன்று தொடரப்படவுள்ளது.

இந்த வழக்கு மத்துரட்ட பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இராகலை குரூப் தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக, தொழிலாளர்கள் உரிமை மீறல் சட்டத்தின் கீழ் தொடரப்படவுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை கம்னியூஸ்ட் தொழிலாளர் சங்கம், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆகியவை இணைந்து முன்னெடுத்து வருகின்றன.

இராகலை உடப்புஸ்ஸலாவை பிரதான வீதி, நடுக்கணக்கு யானை வளைவுப் பகுதியில், டிரக்டர் வண்டியொன்று உடைந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஓர் ஆண் தொழிலாளி உட்பட 25 பெண் தொழிலாளர்கள், படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் கை விரலொன்றை இழந்துள்ளதுடன் மற்றுமொரு தொழிலாளிக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி இருவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் ஏனையத் தொழிலாளர்கள் அனைவரும் அன்றைய தினமே வீடுகளுக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

முறையான சிகிச்சை வழங்கப்படாமலேயே அவர்கள் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

மேற்படித் தொழிலாளர்கள் மறுதினம் காலை மீண்டும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்றபோது, சிகிச்சை வழங்காமல் வைத்தியசாலை நிர்வாகம் அவர்களை மீண்டும் வீடுகளுக்கே அனுப்பியுள்ளது.

இந்நிலையில் விபத்துக்குள்ளான தொழிலாளர்கள் நாள்கணக்கில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுவார்களாயின் அந்த நாள்கணக்குக்கான நட்டஈட்டை செலுத்த வேண்டி வரும் என்பதால், தோட்ட நிர்வாகத்தின் சூழ்ச்சியால் தொழிலாளர்கள் வைத்தியசாலையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டிருக்கலாம் என்று, மேற்படித் தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

விபத்து பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளதால், முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக மேற்படிச் சங்கத்தின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் விபத்தில் பாதிக்கப்பட்டத் தொழிலாளர்களுக்கு, தோட்ட நிர்வாகம் நட்டஈடு வழங்க முன்வர வேண்டும் என்றும். இதற்காக தொழிலாளர்கள் உரிமை சட்டத்தின் கீழ் சிவில் வழக்கு தொடர்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X