2026 மே 01, வெள்ளிக்கிழமை

ஹட்டன் டிப்போவில் ஆளணி பற்றாக்குறை

Editorial   / 2018 நவம்பர் 20 , பி.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, செ.தி.பெருமாள்

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் ஹட்டன் டிப்போவில் ஏற்பட்டுள்ள ஆளணிப் பற்றாக்குறை காரணமாக, பல பகுதிகளுக்கான பஸ் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதென, டிப்போவின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.   
நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தையடுத்து, ஹட்டன் டிப்போவின் கீழ் பணியாற்றிய சில சாரதிகள் மற்றும் நடத்துநர்கள், டிப்போவின் நிர்வாகச் செயற்பாடுகளை, பலவந்தமாகத் தம்வசப்படுத்தியுள்ளனரென்றும் இதன் காரணமாக, பல பகுதிகளுக்கான பஸ் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டு உள்ளதென்றும், ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.   

ஹட்டன் டிப்போவில், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஏதேச்சதிகரமான போக்கு காரணமாக, சில சாரதிகளும் நடத்துநர்களும், முன்னறிவிப்பின்றி சேவையிலிருந்து விலகியுள்ளனர் என்றும் இதன் காரணமாக, டிப்போவில் ஆளணிப் பற்றாக்குறை நிலவி வருதாகவும் தெரிவிக்கப்படுகிறது.   

மேற்படி டிப்போவினூடாக, நாளாந்தம் சுமார் 90 பஸ்கள், குறுந்தூரச் சேவையிலும் நெடுந்தூரச் சேவையில் ஈடுபட்டு வந்துள்ளன என்றும் எனினும், தற்போது 10 பஸ்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.  

இதனால், ஹட்டன் டிப்போவின் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதென்றும் இ.போ.ச பஸ்களை மட்டுமே நம்பி பயணங்களை மேற்கொண்டுவரும் பயணிகள், மாணவர்கள், அரசாங்க ஊழியர்கள், பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.  

இன்னும் பல பகுதிகளுக்கான சேவையை இடைநிறுத்துவதற்கும், ஹட்டன் டிப்போவின் அதிகாரிகள் சிலர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.   

இந்நிலைமை நீடிக்குமாயின், டிப்போவின் வருமானம் முற்றுமுழுதாக வீழ்ச்சிடையுமென்றும் தெரிவிக்கப்படுகிறது.  

இது தொடர்பில், டிப்போவின் முகாமையாளர் ஏ.கே.பி.மஹநாமவை தொடர்புகொண்டு கேட்டபோது, முன்னறிவிப்பின்றி சேவையிலிருந்து விலகியுள்ள சாரதிகள் மற்றும் நடத்துநர்களை, மீண்டும் சேவையில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும், சாரதி மற்றும் நடத்துநர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்காக, புதியவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .