2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கூடாது: இராதாகிருஸ்ணன் எம்.பி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.தியாகு

'இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை எந்த காரணம் கொண்டும் இந்திய அரசாங்கம் புறக்கணிக்க கூடாது. இந்த மாநாட்டில் பங்குபற்றி இலங்கையின் காத்திரமான செயல்திட்டங்களுக்கு தனது முழுமையான பங்களிப்பை செய்ய இந்திய அரசாங்கம் முன்வர வேண்டும்' என மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இதே கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதனை நான் வரவேற்கின்றேன். வடக்கில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடைபெற்று அந்த மக்கள் தாம் விரும்பிய தரப்பினரை தெரிவு செய்திருக்கின்றார்கள். இதுவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

எமது நாட்டில் ஜனநாயகம் இல்லை என்று கூறியவர்களுக்கு இது ஒரு சாட்டை அடியாக அமைந்து விட்டது. வடக்கில் அரசாங்கம் தோல்வி கண்டது என்பதைவிட ஜனநாயகத்தை ஜனாதிபதி வெற்றிபெறச் செய்துள்ளார் என்பதே உண்மை. இந்திய அரசாங்கம் வடக்கில் தேர்தலை நடத்தி அந்த மக்கள் விரும்பிய சாராரை தெரிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு வழியுறுத்தி வந்தனர். இன்று அது சாத்தியமாக்கப்பட்டுள்ளது.

எனவே அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமானால் இந்த பொதுநலவாய மாநாட்டில் இந்திய அரசாங்கத்தின் பிரதமர் டாக்டர்.மன்மோகன்சிங் கலந்து கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

வடக்கில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் நடைபெற்று முடிந்த இந்த வேளையில் அடுத்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பொதுவநலவாய மாநாட்டை குறிப்பிடலாம்.

இதில் இந்தியா பங்குபற்றுவதன் மூலம் தமிழர்களின் முன்னேற்றத்திற்கு தனது காத்திரமான பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும். அதைவிடுத்து இந்த மாநாட்டை புறக்கணிப்பது என்பது அது தமிழர்களுக்கு பாதகமாவே அமையும். இதனை கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் தீர்மானத்தை எடுக்கவேண்டும்.

இலங்கை தொடர்பாக பல்வேறு நாடுகளில் நிலவிவந்த கருத்துக்களை பொய்ப்பிக்கும் ஒரு சந்தர்ப்பமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. இங்கு வருகை தரவுள்ள அரச தலைவர்கள் நேரடியாக இலங்கையில் நடைபெறுகின்ற அபிவிருத்தியையும் எமது சமாதானமான சூழலையும் பார்த்து தெரிந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

எனவே இவற்றையும் கருத்தில் கொண்டு இந்த மாநாட்டில் இந்தியா பங்குபற்ற வேண்டும் என்பதே எனதும் மலையக மக்களினதும் எதிர்பார்ப்பாகும்" என அவர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .