2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அக்குறணை மக்களிடம் செய்த ஒப்பந்தத்தை மு.கா. மறந்துவிட்டது: பீ.எம்.ஜே.டி

Super User   / 2013 நவம்பர் 05 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கல்முனை மேயரின் பதவிக் காலம் குறித்த ஒப்பந்தம் தொடர்பில் பேசுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அக்குறணை மக்களிடம் செய்த ஒப்பந்தத்தை முற்றாக மறந்து செயல்படுகிறது என பீ.எம்.ஜே.டி தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்ட மக்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒவ்வொரு தேர்தலிலும் ஏமாற்றி வாக்குகளை பெற்று விட்டு மக்களது தேவைகளை மறந்து விடுகின்றது எனவும் பீ.எம்.ஜே.டி குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக பீ.எம்.ஜே.டி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"2011ஆம் ஆண்டு அக்குறணை பிரதேச சபைத் தேர்தலில் சுயேட்சைக் குழுவாகக் களமிறங்க இருந்த எமது அமைப்பை அழைத்து ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார்கள். ஆரம்பத்தில் மறுத்த நாங்கள், உலமாக்களது வேண்டுகோளை மதித்து அதனை ஏற்றோம். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 80 கோடி ரூபா பெருமதியான வேலைத்திட்டங்களைச் செய்வதாகவும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அக்குறணை மக்களது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் உள்ளிட்ட பல விடயங்களை கொண்ட ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டன.

இதுவரை எதனையும் முறையாகச் செய்யவில்லை. மாறாக, அன்மையில் ஜனநாயக முறையில் எமது அங்கத்தவர் இர்பான் காதருக்குக் கிடைக்க வேண்டிய அங்கத்துவத்தை, எமது அனுமதியின்றி அநீதியான முறையில் தனதாக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

எல்லையற்ற இந்த அநியாயங்களை நாம் வண்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த அநியாயங்களுக்கு மக்கள் முறையான பாடங்களைக் கற்பிப்பார்கள். அக்குறணை  பிரதேச சபையில் தமக்குப் பிரதிநிதித்துவம் இல்லை என்பதால், பீ.எம்.ஜே.டி யின் பிரதிநிதித்துவத்தை விட்டுத்தருமாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஒப்பந்தப்படி மக்களுக்கு ஏதாவது செய்திருந்தால் மக்கள் வழங்கிய பிரதிநித்துவத்தை உடனடியாக விட்டுக் கொடுத்திருப்போம். இருந்தாலும் பரவாயில்லை. நாம் விட்டுத்தருகின்றோம். ஆனால், அதற்குக் கைமாறாக அக்குறணை பாலிகா வித்தியாலயம் எதிர்கொண்டு வருகின்ற இடப்பற்றாக் குறைக்கு ஒரு கட்டிடத்தை வழங்குவதற்கு ஆக்கபூர்வமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்றோம்.

எமது கோரிக்கைகளையோ, அக்குறணை மக்களது தேவைகளையோ முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மதிப்பதாக தெரியவில்லை. இந்த எல்லையற்ற அநீதிகளை கட்சியில் உள்ள ஏனைய உறுப்பினர்களும் கவனத்தில் எடுப்பது நல்லது என்றே நாங்கள் நினைக்கின்றோம்.

கல்முனை மேயர் விடயத்தில், முஸ்லிம் காங்கிரஸ் தலைமையே தவறு விட்டிருக்கின்றது. நெகிழ்ந்து கொடுக்காமல் ஆரம்பத்தில், தீர்க்கமானதொரு முடிவை எடுத்திருந்தால் இன்று இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வந்திருக்காது.

அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவருக்கு மேயர் பதவி வழங்குவதென்றால், அதனை முறையாகச் செய்திருக்க வேண்டும். இதேவேளை, இரண்டு வருடங்களில் திரும்ப ஒப்படைப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தால் கட்டாயம் மேயர் சிராஸ் மீராசாஹிப் அதனை நிறைவேற்ற வேண்டும்.

ஏனெனில், முஸ்லிம் தலைமைத்துவங்கள் நீதியாகவும், நேர்மையாகவும் நடக்கத் தவறி வருகின்றதன் விளைவுகளையே சமூகம் இன்று அனுபவித்து வருகின்றது. வளர்ந்து வருகின்ற தலைவர்களும் அத்தவறுகளையே செய்தால், எதிர்காலத்திலாவது இந்நாட்டு முஸ்லிம்களுக்கு நீதியான தலைவர்கள் உருவாகுவதற்கு வாய்ப்புக் கிடைக்காமல் போய்விடும்.

எனவே, கல்முனை மேயர் இவ்விடயத்தில் குறுகிய பிரதேசவாத சிந்தனைக்கு அப்பால் இருந்து, தேசிய ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சிந்தித்து ஒரு நல்ல முடிவை எடுப்பார் என நாங்கள் நம்புகின்றோம்.  இதேவேளை, பிரதி மேயர் சட்டதரணி நிஸாம் காரியப்பவர் விட்டுக்கொடுப்புடன் நடந்து கொள்ளலாம். அவ்வாறு நடந்துகொண்டால், இலங்கை பூராகவும் அவர் நன்மதிப்பைப் பெறுவதற்கு வாய்ப்பாகவும் முன்னுதாரணமாகவும் அமையும" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0

  • Rilwan Tuesday, 05 November 2013 01:40 PM

    விட்டுக் கொடுப்பா? என்னப்பா சொல்றீங்க? நீங்க செய்வீங்க. எல்லாரையும் எதிர்பார்க்க வேண்டாம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .