2021 ஜூன் 17, வியாழக்கிழமை

3,021 உதவி ஆசிரியர் நியமனம் மார்ச் மாதம் வழங்கப்படும்

Sudharshini   / 2015 ஜனவரி 29 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான 3,021 உதவி ஆசிரியர் நியமனம் மார்ச் மாதம் அளவில் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.


இராஜாங்க கல்வி அமைச்சின் காரியாலயத்தில் பரீட்சைகள் ஆணையாளருடன் புதன்கிழமை (28) நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்தே இந்த தகவலை அவர் தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,


கடந்த வருடம் நடைபெற்ற பெருந்தோட்ட உதவி ஆசிரியர்களுக்கான போட்டி பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அளவில் வெளியிடப்படுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தன்னிடம் குறிப்பிட்டார் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


மேலும், பரீட்சை முடிவுகள் வெளியான பின்பு 10 நாட்களில் தெரிவு செய்யப்பட்ட 9,100 பேருக்கு நேர்முகத் தேர்வுக்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும். நேர்முக பரீட்சையில் தெரிவு செய்யப்படும் 3,021  பேருக்கு நியமனங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறும். அநேகமாக எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் இந்த நியமனங்களை வழங்கி வைக்க எதிர்ப்பார்ப்தாக அவர் கூறினார்.


இந்த போட்டி பரீட்சையை பொறுத்தவரையில் 20,000 பேர் இதற்காக விண்ணப்பித்திருந்தார்கள். அவர்களில் 14,000 பேர் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்கள். அவர்கள் பெற்றுக் கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் 9,100 பேருக்கு நேர்முகத் தேர்வுக்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதில் எந்தவிதமான அரசியல் தலையீடும் இருக்காது. தகுதி அடிப்படையில் நியமனம் வழங்கப்படும்.


எனவே, பரீட்சைக்கு தோற்றியவர்கள் யாரும் தரகர்களிடம் செல்ல வேண்டாம். அதற்கு காரணம் கடந்த காலங்களில் எனது பெயரை பயன்படுத்தி மலையக பகுதிகளில் ஒரு சிலர் பணம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளேன்.


இந்த ஆசிரியர் நியமனத்தை பயன்படுத்தி ஒரு சிலர் ஏமாற்று வேலைகளில் ஈடுபடலாம். அவ்வாறானவர்களிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். தயவு செய்து பணத்தை கொடுத்துவிட்டு வந்து என்னிடம் முறைப்பாடு செய்ய வேண்டாம். தகுதியான அனைவருக்கும் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் நியமனம் வழங்கப்படும்.


இதன்படி, மத்திய மாகாணத்துக்கு 1,084 பேரும் ஊவா மாகாணத்துக்கு 996பேரும் சப்ரகமுவ மாகாணத்துக்கு 772பேரும் மேல் மாகாணத்துக்கு 97 பேரும் தென்மாகாணத்திற்கு 67 பேரும் வடமேல் மாகாணத்துக்கு 5 பேருமாக மொத்தமாக 3,021 பேருக்கு இந்த ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது.

 


  Comments - 0

  • ஸ்ரீதரன் Wednesday, 06 May 2015 06:44 AM

    பரீட்சைக்கு தோற்றி பெறுபேறுகள், நியமன கடிதம் மற்றும் நேர்முக பரீட்சைக்கு கடிதம் எதுவுமே வராத பரீட்சாத்திகளுக்கு நீங்கள் கூறும் பதில் தான் என்ன??????????????????????எவ்வாறான அடிப்படையில் தாங்கள் இந்த நியமணம் கொடுப்பீர்கள்???இந் நியமனங்கள் நியாயமானதா?பதில் எதிர்பார்க்கின்றனர் பாதிக்கப்பட்ட பரீட்சாத்திகள்................................?பரீட்சை புள்ளிகள் எங்கே? இனி பரீட்சை புள்ளிகள் வெளிவந்தால் அது முழுக்க முழுக்க பொய்யானதாகவே அமையும்.ஏன் இந்த ஏமாற்றம் பரீட்சாத்திகளுக்கு?????????????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .