2026 மே 14, வியாழக்கிழமை

சிறுபான்மையினத்தவர்கள் திட்டமிட்ட வகையில் புறக்கணிப்பு

Kogilavani   / 2015 ஜூன் 26 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

வேலைவாய்ப்பில் சிறுபான்மையினத்தவர்கள் திட்டமிட்டவகையில் புறக்கணிக்கப்படுவதாக இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் திட்டமிட்ட வகையில்; தமிழர்களையும் முஸ்லிம்களையும் அமைச்சின் ஊடாக வழங்கப்படுகின்ற வேலைவாய்ப்பில் புறக்கணிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கல்வி அமைச்சின் ஊடாக 1295 வேலைவாய்ப்புகள் நாடு பூராகவும் உள்ள கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கலாசாலை, தேசிய பாடசாலைகளில் உள்வாங்கப்படவுள்ளன.

இந்த வேலைவாய்ப்புகளில் கல்வி இராஜாங்க அமைச்சுக்கு 260 வேலைவாய்ப்புகளை கல்வி அமைச்சு பெற்றுக் கொடுத்திருந்தது.
இதன் அடிப்டையில் நாங்கள் இவற்றுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பபங்கள் கோரப்பட்டு அவர்களுக்கான நேர்முகத் தேர்வும் நடாத்தப்பட்டு நிறைவு செய்யப்பட்டது. நேர்முகத் தேர்வுக்கு தோற்றியவர்களில் தகுதியானவர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் தயார் செய்யப்பட்டு கல்வி அமைச்சின் செயலாளர் கையொப்பமிட இருந்த நிலையில் அதனை தான் வழங்க வேண்டும் என கூறி கல்விஅமைச்சர் அகில விராஜ் காரியவசம் 260 வேலைவாய்ப்புகளையும் அவருடைய அமைச்சின் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதோடு அவற்றிற்கு உடனடியாக நேர்முகத் தேர்வு நடாத்தப்பட்டு நியமனக் கடிதங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இது எந்த வகையில் நியாயமான ஒரு விடயம் என்பது எனக்கு புரியவில்லை. இந்த அரசாங்கத்தை அமைப்பதில் பிரதான பங்கு வகித்த தமிழர்களும் முஸ்லிம்களையும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் திட்டமிட்ட அடிப்படையில் ஒரங்கட்டுவதுடன் அவருடைய பகுதியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் இந்த நியமனங்களை வழங்கப்படுவது முற்றிலும் சிறுபான்மை மக்களை புறக்கணிக்கின்ற ஒரு செயலாகவே நான் கருதுகின்றேன்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சிறுபான்மை சமூகத்துக்கு  செய்த பிழையின் காரணமாக அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த அரசுக்கு எதிராக வாக்களித்து இந்த அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்றினார்கள். எனவே இந்த அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் தேர்தலில் எங்களுடைய மக்கள் வாக்களிக்க வேண்டிய ஒரு சூழ்நிலையை அமைச்சர் அகில விராஜ் காரியவசமும் அவருடைய செயலாளரும் ஏற்படுத்துவதாகவே நான் உணருகின்றேன். நாங்கள் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கின்ற காரணத்தால் எமது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை பார்த்துக் கொண்டு வாய் மூடி மௌனிகளாக இருக்க முடியாது. நான் இவ்விடயம் தொடர்பாக பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன்.

அரசாங்க வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்ற போது அனைவருக்கும்  அது சமனாக வழங்கப்படவேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் அமைச்சர்களாக இருப்பதில் எந்தவிதமான பயனும் இல்லை. நாங்கள் எங்கள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இருக்கின்றது.

மேலும் கடந்த அரசாங்கத்தில் இருந்தவர்கள் வாய் மூடி மௌனிகளாக இருந்த காரணத்தால் எமது சமூகததுக்கு கிடைக்க வேண்டிய பல நன்மைகள் கிடைக்காமல் போய்விட்டன. எனவே அந்த நிலையை தொடரவிட முடியாது. இது தொடர்பாக நான் சிறுபான்மை அமைச்சர்களிடமும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கலந்துரையாடியுள்ளேன்' எனவும் அவர் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .