2026 மே 09, சனிக்கிழமை

dd

2018ஆம் ஆண்டுக்கான வரி இரத்து

Editorial   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

கொட்டகலை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள், 2018 ஆம் ஆண்டுக்கான வரியை அறிவிடத் தேவையில்லை என்றும் இது தொடர்பில், பிரதேச சபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும்  பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.

புதிய வரிவிதிப்புத் தொடர்பில் கொட்டகலை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மக்களுக்கு அறிவுறுத்தும் விசேடக் கூட்டம், பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாத் தலைமையில் தலவாக்கலை குமார பிரதேசத்திலுள்ள கிராமசேவகர் அலுவலகத்தில் நடைபெற்றது.

புதிய பிரதேச சபைகளை ஏற்படுத்தியதால் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக 2018ஆம் ஆண்டுக்கான வரியைச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் எனவே அவ்வாண்டுக்குரிய வரியை அறவிடுவது இல்லை என்று, பிரதேச சபையின் அமர்வில் எடுக்கப்பட்டத் தீர்மானத்துக்கு அமைவாக அந்த வரியைச் செலுத்த வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும் 2019 ஆம் ஆண்டுக்கான வரியை செலுத்துமாறும் அவர் பிரதேச மக்களிடம் அறிவுறுத்தினார்.

தலவாக்கலை - லிந்துலை நகரசபை வசமிருந்த கிராமங்கள் தொடர்பான சகல பெயர் பட்டியல்களும் அங்கு வாழும் குடும்பங்கள் தொடர்பான விவரங்களும், 2019 ஜூலை 2ஆம் திகதியன்று தமக்கு கிடைத்ததாகவும் அதற்கமைய குறித்த தகவல்களை தமது அலுவலகத்தில் உரிய அதிகாரியிடம் ஒப்படைத்து அது தொடர்பான பதிவுகளை மேற்கொண்டதோடு, மேலும் அவற்றை உறுதிப்படுத்துவதற்காக தற்போது உள்ளூராட்சிமன்ற திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எனவே இதன் காரணமாகவே 2018ஆம் ஆண்டுக்கான வரிகளை அறவிட முடியாத நிலைமை ஏற்பட்டதாகவும் கூறினார்.எனவே தற்போது 2019ஆம் ஆண்டுக்கும் வரிகளை அறவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளமையால் பிரதேசமக்களின் நலன்கருதி 2018ஆம் ஆண்டுக்கான வரியைச் செலுத்தாது 2019ஆம் ஆண்டுக்குரிய வரியை மாத்திரம் செலுத்துவதற்கான தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் கூறினார்.

எனவே இன்னும் ஓரிரு மாதங்களில், 2019ஆம் ஆண்டுக்குரிய வரியை தவறாது அனைவரும் செலுத்துமாறும், அதற்குரிய அதிகாரியை தலவாக்கலை பிரதேசத்துக்கே தான் அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு இதுவரை காலமும் நகரசபைக்கு 21சதவீத வரியைச் செலுத்தி வந்த மக்கள், தற்போது பிரதேசசபைக்கு 15 சதவீதமான தொகையை மாத்திரமே வரியாக செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .