Kogilavani / 2015 நவம்பர் 25 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மீள் புதுப்பிக்கத்தக்க சக்திவலு பிறப்பாக்கத் துறையில் முன்னேற்றங்களை அடைந்து கொள்வதற்கான நிகழ்ச்சித் திட்டங்களில் அரச மற்றும் தனியார் துறையின் பங்களிப்பு அவசியமானதாகும்' என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாட்டில் தாராளமான இயற்கை வளங்கள் நிறைந்துள்ள நிலையில் மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலு பிறப்பாக்கத்துக்கு இலங்கையில் அதிக வாய்ப்பு வசதிகள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த நோக்கத்துக்காக முதலீட்டாளர்களை ஊக்குவிக்க வேண்டியது அவசியமானதாகும் என்றும் குறிப்பிட்டார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (23) நடைபெற்ற இலங்கை தேசிய சக்திவலு விருது வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
தொடர்ச்சியான வளர்ச்சிக்கு சக்திவலுத் துறையில் துரிதமானதும் அறிவு பூர்வமானதுமான நடவடிக்கை அவசியமாகும் என்றும் சக்திவலுவை இறக்குமதி செய்வதற்காக செலவிடும் பெருந்தொகை பணத்தை நாம் மீதப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அரச மற்றும் தனியார்த்துறை நிறுவனங்களில் மின்சார பயன்பாட்டை முகாமைத்துவம் செய்வதற்கு பொறுப்பான அதிகாரிகளை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
இதன்போது, நாட்டில் சக்திவலு பேணுகைக்கு பங்களிப்பு செய்த அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஜனாதிபதி விருதுகளையும் வழங்கிவைத்தார்.
தங்களது தொழில்சார் நடைமுறைகளில் நிலையான சக்திவலு துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த தனிநபர்களுக்கும் ஜனாதிபதி கௌரவ விருதுகளை வழங்கினார்.
மின்சாரம், சக்தி வலுத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா, அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.எம்.எஸ்.பட்டகொட, இலங்கை நிலையான சக்திவலு அதிகார சபையின் தலைவர் ஜே.பி.கே.விக்ரமசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .