-எம்.இஸட். ஷாஜஹான்
சுவிஸ் பிரஜையின் 400 டொலர் பணத்தை திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட நீர்கொழும்பு நட்சத்திரத்தர ஹோட்டல் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு உல்லாசத்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சுவிஸ் பிரஜை ஒருவரின் 400 டொலர் பணத்தை திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட இருவரை நீர்கொழும்பு பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.
குறித்த ஹோட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் இருவரே கைது செய்யப்பட்டவர்களாவர். ஹோட்டலின் 'ரூம் போய்' ஒருவரே அந்த சுவிஸ் பிரஜையின் பயணப் பொதியில் இருந்த 400 டொலரினை திருடியுள்ளதாகவும் பின்னர் அந்தப் பணத்தில் 100 டொலரினை ஹோட்டல் மேற்பார்வையாளரிடம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தனது பணம் திருடப்பட்டமை தொடர்பில் சுவிஸ் பிரஜை, பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து, நீர்கொழும்பு பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.