2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

நமது ஐக்கியம், நமது வாக்கு, நமது பலம் என்ற கோஷத்தை மக்களிடம் எடுத்து செல்லுங்கள்: மனோ கணேசன்

Super User   / 2014 ஜனவரி 20 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழர் ஐக்கியம், தமிழர் வாக்கு, தமிழர் பலம் என்ற எங்கள் பிரதான கோஷத்தை தலைநகர தமிழ் பேசும் மக்களிடம் எடுத்து செல்லுங்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

"தலைநகரில் நாங்கள் பலமாக இல்லாவிட்டால் இங்கே எவரும் நம்மை கணக்கில் எடுக்கப்போவது இல்லை. இங்கே நாங்கள் பலமாக இருப்பது இங்கே வாழும் எங்களுக்கு மட்டும் அல்ல, மலையகத்திலும் வடக்கிலும், கிழக்கிலும் வாழும் எங்கள் உடன் பிறப்புகளுக்கும் அவசியத்தேவை என்பதை எடுத்து கூறுங்கள்" என அவர் குறிப்பிட்டார்.


ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாண சபைக்கான கொழும்பு மாவட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதன்போது புறக்கோட்டை பிரதேசத்தில் பிரசார துண்டு பிரசுர விநியோகத்துக்காக கட்சி அணியினரை வழியனுப்பி வைத்தபோது உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,     
'தலைநகர் தமிழ் பேசும் மக்கள் எங்களுடன்தான் இருக்கின்றார்கள் என்பதை நாங்கள் ஆளும் தரப்புக்கும் இந்நாட்டு அரசியல் கட்சிகளுக்கும் உலகத்துக்கும் நிரூபித்து காட்டுவோம்.
இந்த நாட்டில் இன்று பேரினவாதம் வேரூன்றி விட்டது. சிறுபான்மை மக்கள் எதை கேட்டாலும் அதை இனவாத மதவாத கண்ணோட்டத்துடன் பார்க்கும் கலாசாரம் இன்று எல்லா பெரும்பான்மை அரசியல் கட்சிகளுக்கு உள்ளேயும் குடி புகுந்துவிட்டது.
 
இந்த நிலையில் நாங்கள் எங்கெங்கே வாழ்கிறோமோ அங்கெல்லாம் நாம் பலமாக இருக்க வேண்டும் என்று சொல்வதோ அல்லது நமது இனத்து வாக்கு நமக்கு கிடைக்க வேண்டும் என்று கூறி நமது மக்களின் வாக்கை நாம் கேட்டு வாங்கி கொள்வதோ ஒருபோதும் இனவாதம் இல்லை.
இது எங்கள் இன உரிமை. இதை இனவாதம் என்று எவரும் சொல்வார்களேயானால் நான் சந்தோசமாக இனவாதி என்ற பட்டத்தை ஏற்றுகொள்கிறேன்.
நாங்கள் பிரிவினைவாதிகள் அல்ல. எங்கள் உரிமைகளை ஒரே நாட்டுக்குள்ளேதான் நாம் தேடுகிறோம். ஐக்கிய இலங்கைக்குள் இந்த நாட்டின் பெரும்பான்மை இனத்து மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை எங்கள் மக்களும் பெற்று வாழ வேண்டும்.
எங்களின் மத, இன கலாசார வாழ்வு பாதுகாக்கப்பட வேண்டும் என நான் பாடுபடுகிறேன். இதற்காக எவரும் எனக்கு எந்த பட்டம் சூட்டினாலும் நான் சளைக்கமாட்டேன்.
நான் ஒரு பீனிக்ஸ் பறவை. மீண்டும், மீண்டும் எழுந்து வருவேன். இது எங்கள் கட்சி. இது எங்கள் நாடு. இது எங்கள் தலை நகரம். இந்த செய்தியை மக்களிடம் எடுத்து செல்லுங்கள்.
எங்கள் வெற்றியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.  இங்கே எங்கள் வெற்றியை எங்கள் வடக்கு, கிழக்கு, மலையக உடன் பிறப்புகளுக்கும் எதிர்பார்த்து நிற்கிறார்கள்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X