2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

'அரசியல் தலையீடுகளின் நடைபெற்ற முதல் நியமனம்'

Gavitha   / 2015 மே 09 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்

இலங்கை வரலாற்றில், அரசியல் தலையீடுகள் இன்றி வழங்கப்பட்ட நியமனம் என்றால், அது இம்முறை வழங்கப்பட்ட ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனமாகவே இருக்கமுடியும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (08) கொழும்பிலுள்ள கல்வி அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது 1,688 பேருக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது உரையாற்றுகையில் இராஜாங்க கல்வி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று இந்த நியமனம் 1,688 பேருக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றது. எதிர்வரும் 29ஆம் திகதி இன்னும் 1,333 பேருக்கான நியமனங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நியமனம் உடனடியாக கிடைத்த ஒன்று அல்ல. இதற்காக நான் எனது அமைச்சு பதவியையும் துறக்கவும் தயாராக இருந்தேன். எமது மக்களுக்கு கிடைக்கவேண்டிய விடயங்கள் கிடைக்காவிட்டால், அதற்காக நான் என்றும் போராட தயங்க மாட்டேன்.

இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் மலையக கல்வியில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவந்தார். அவர் என்றும் மலையக மக்களின் கல்விக்காக முழு அர்ப்பணிப்புடன் பங்களிப்பை செலுத்தி வருகின்றார். மலையக மக்கள் எங்கிருந்தாலும் கௌரவமான தொழில் பெற்று வாழ வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும். எனவே எதிர்காலத்தில் இந்த பயணத்தில் நல்ல ஒரு நிலை ஏற்படவேண்டும் என நான் செயல்பட்டு வருகின்றேன்.

ஒரு சில அரசியல்வாதிகள் அறிக்கைகளைவிட்டு கொண்டு இதனை பெற்றுக்கொடுக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்கள். நான் அறிக்கைவிடுபவன் அல்ல. வேலையை செய்து முடித்துவிட்டு அதனை பயனைபெற்றுக் கொடுக்க என்னை அர்ப்பணித்து சேவை செய்பவன் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம், பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை, ஊவா மாகாண கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஸ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான உதயகுமார், சரஸ்வதி சிவகுரு, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான அ.அரவிந்தகுமார், எம்.சச்சிதாநந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X