2025 மே 21, புதன்கிழமை

அனந்தியின் துப்பாக்கி விவகாரம்: ஈ.பி.டி.பி, சு.க வெளிநடப்பு

Editorial   / 2018 ஜூலை 31 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜிதா

வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு ஆதரவாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை, யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளததால், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பன, சபை அமர்வை இன்று (31) புறக்கணித்து, வெளிநடப்புச் செய்தன.

யாழ்ப்பாண மாநகர சபை அமர்வு, மாநகர சபையின் கேட்போர்கூடத்தில், மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், துப்பாக்கி வைத்திருக்கிறாரெனக் கூறி, தழிரழரசுக் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களால் பல சர்ச்சையான கருத்துகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தன.

இதையடுத்து, இக்கருத்துகளைக் கண்டித்து, ஈ.பி.டி.பி உறுப்பினர்கள், கண்டனப் பிரேரணையொன்றை முன்வைத்தனர்.

இப்பிரேரணையை முன்வைத்துச் சபையில் கருத்துரைத்த ஈ.பி.டி.பி உறுப்பினர்கள், “அரசியலில் பெண்களின் வகிபங்கு அரிதாகி இருக்கும் எமது நாட்டில், அரசியல் செயற்பாடுகளில் முன்னின்று செயற்படும் ஒரு சில பெண்கள் மீது, அவதூறுகளைப் பூசி, பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவமானப்படுத்துவதுடன், அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதானது, அநாகரிகமான செயற்பாடாகும். எனவே, இவ்வாறான செயற்பாடுகள், சபையில் கண்டிக்கப்பட வேண்டும்” எனக் கோரினர்.

அவர்களின் அந்தக் கருத்து சபையில் உள்வாங்கப்படாததால், அதற்கு ஆட்சேபனை தெரிவித்த ஈ.பி.டி.பி, 30 நிமிடங்களுக்குச் சபை நடவடிக்கைகளைப் புறக்கணிப்புச் செய்தது.

இதையடுத்து, இந்த விடயம் தொடர்பில், சபையில் ஆட்சேபனை கொண்டுவரப்பட வேண்டும் என்று, ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான றெமீடியஸ் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு, சபையின் ஏனைய உறுப்பினர்கள் ஆதரவு கொடுக்காத நிலையில், ஈ.பி.டி.பி, ஶ்ரீ.ல.சு.க ஆகியன, இதைக்கண்டித்து வெளிநடப்பு செய்தன.

இது தொடர்பில், ஈ.பி.டி.பி றெமீடியஸ் கருத்துத் தெரிவிக்கையில், “வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், இனிவருங்காலத்தில் அரசியல் பிரவேசத்துக்கு வரவுள்ளப் பெண்களை அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

பெண்களுக்கெதிரான இவ்வாறான செயற்பாடுகள் இனியும் நடைபெறக் கூடாது என்பதை வலியுறுத்தி சபை கண்டிக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், ஆனால், இந்தச் சபை அதற்கு இடங்கொடுக்கவில்லையெனவும் குற்றஞ்சாட்டினார்.

இதேவேளை, அனந்தி சசிதரனிடம் கைத்துப்பாக்கி உள்ளதா, இல்லையா என்பது, சர்ச்சைக்குரிய ஒரு விடயமெனவும், அது தொடர்பில் தாம் அக்கறை கொள்ளவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

கைத்துப்பாக்கி ஒன்றை அனந்தி சசிதரன் வைத்துள்ளார் என்று மாகாணசபையில் மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தால், பல்வேறு கருத்துகள், பலதரப்பினராலும் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .