2025 மே 17, சனிக்கிழமை

அவசரகாலச் சட்ட விவகாரம்: ‘ஜனநாயகத்தை நசுக்கினால் சட்டத்தை எதிர்ப்போம்’

Editorial   / 2019 மே 17 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அவசரகாலச் சட்டம் கொண்டு வந்ததாகக் கூறிக் கொண்டு அந்தச் சட்ட விதிகளைப் பாவித்து பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளை அல்லது ஜனநாயகக் கோரிக்கைகளை நசுக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்குமானால் அந்தச் சட்டத்தை நாங்கள் எதிர்க்கும் நிலை ஏற்படும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

“தேவையற்ற விதத்தில் அவசரகால விதிகளை தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துகின்ற செயற்பாடுகளையும் அரசாங்கம் கைவிட வேண்டும்” என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கேட்டுக்கொண்டார்.   

யாழ். இணுவிலில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஐதீபனின் இல்லத்தில் நேற்று (16) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த ​போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

“அவசரகாலச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் கூட்டமைப்பும் ஆதரவளித்ததாக ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், மிகக் கடுமையாக கூட்டமைப்பைத் தாக்கியிருந்ததை ஊடகங்களில் பார்த்திருக்கின்றேன். ஆனால், அந்த அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எதைச் செய்திருந்தாரோ அதைத் தான் நாங்களும் செய்திருக்கின்றோம். அதனை விட நாங்கள் வேறொன்றும் மறைவாகச் செய்யவில்லை” என்றார்.   

அவசரகாலச் சட்ட விதிகளைப் பாவித்து எங்கள் மக்களின் ஐனநாயக கோரிக்கைகளை நசுக்க முற்பட்டால் அதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று நான் சொல்லியிருந்தேன் என தெரிவித்த அவர், அவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தால் அதற்கு எதிரான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்பொம் என்றும் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம் என்றார்.   

பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டும் அந்தப் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் பொருள்களும் கண்டு பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுத்தான் தீர வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், இந்தப் பயங்கரவாத நடவடிக்கைகள் எங்களையும் நிச்சயமாகப் பாதிப்பதாகவே உள்ளன என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .