2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவிப்பது அவசியம்’

எம். றொசாந்த்   / 2018 நவம்பர் 01 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியில் வடமாகாண தமிழ் இளைஞர்களும் இணைந்து கொள்வதுக்கான வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் இங்குள்ள இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவிப்பது அவசியம் என வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

வடமாராட்சி கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் நெல்லியடி மத்திய கல்லூரி அரங்கில் நேற்று (31) நடைபெற்ற வர்ண இரவுகள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் குடாநாட்டிலே முன்னொரு காலத்தில் மாணவர்கள் எவ்வாறு கல்வி பயின்றார்கள் என்பதை எனது பெற்றோர் எனக்கு சிறு வயதில் சொல்லிக் கொடுத்திருக்கின்றார்கள். வீட்டில் வெளிச்சம் இல்லாத இரவுகளில் வீதி விளக்குகளின் வெளிச்சத்திலிருந்து கல்வி கற்றார்கள் என கூறினார்கள்.

அவ்வாறு கல்வி கற்றவர்கள்தான் தென்பகுதியில் பெரிய பெரிய உத்தியோகங்களில் இருக்கின்றார்கள் என கூறினார்கள். அவ்வாறு ஒரு காலத்தில் கல்வி முன்னேற்றமாக இருந்தது. ஆனால் கடந்த சில காலங்களில் கல்வி பின்னோக்கி சென்றது. ஆனால் தற்போது மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக கல்வி முன்னோக்கி வருகின்றது என்று தெரிவித்தார்.

எதிர்வீரசிங்கம், ஆழிக்குமரன் ஆனந்தன் தற்போது ஆசிய கூடைப்பந்தாட்டத்தை சுவீகரித்த தர்சினி போன்றவர்கள் வடமாகாணத்திலிருந்தே இந்த நாட்டுக்கு பெருமை சேர்த்து தந்தார்கள்.

அதேபோன்று இங்கே தேசிய மட்டத்தில் பல பதக்கங்களை பெற்றவர்கள் உள்ளனர். அவர்களை மேலும் வளப்படுத்த வேண்டும். சர்வதேச அணிகளுடன் விளையாடக்கூடிய வகையில் அவர்களுக்கான பயிற்சிகளை வழங்க வேண்டும்.

ஆசியாவில் விளையாடி இலங்கைக்கு பெருமையை தேடித்தந்த செல்வி தர்சினியை பாராட்டும் அளவுக்கு எனக்கு தமிழ் மொழி தெரியாது. அதனால் கவலை அடைவதாக தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் பிழையான கருத்துக்களை தெரிவித்து அவர்களை பிளவுபடுத்த நினைக்கின்றார்கள். தமது தலைமைத்துவத்தை தக்க வைக்க நினைக்கின்றார்கள். அவர்களின் பிழையான தகவல்களை கருத்தில் கொள்ளாது சரியானவற்றை இனங்கண்டு செயற்படுமாறு உங்கள் அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

இந்நிகழ்வில் தென்மராட்சி வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.நந்தகுமார், வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.அகிலதாஸ் உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X