2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

’உளவிருத்தி தொடர்பில் அக்கறை செலுத்தவும்’

Niroshini   / 2021 ஜனவரி 06 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-என்.ராஜ்

பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கும் போது மாணவர்களுடைய உளவிருத்தி செயற்பாடு தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டுமென்று, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார்
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் நிலையில், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஓரளவு தணிந்துள்ள சூழ்நிலையில், சமூக இடைவெளியை கடைப்பிடித்தவாறு பாடசாலைகளை இயக்க வேண்டிய அவசியம் உள்ளதென்றார்.

காய்ச்சல், தொண்டை நோ, இருமல் உள்ளவர்கள் பாடசாலைகளுக்கு செல்வது தவிர்க்கப்பட வேண்டுமெனத் தெரிவி;த்த அவர், கொரோனா காலத்தில் இழந்த கற்றல் செயற்பாடு மீட்கப்பட வேண்டுமெனவும் மிக முக்கியமானது சில பின்தங்கிய பிரதேசங்களில், மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகும் தன்மை அதிகமாக காணப்படுகின்றதெனவும் கூறினார்.

இது நீண்டகால நோக்கில் ஒரு சமூகப் பிரச்சனையாக மாறுமெனத் தெரிவித்த அவர், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டால், எதிர் காலத்தில் அவர்களுடைய வேலை வாய்ப்பு மற்றும் குடும்பம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சமூகத்தில் சிறுவயதிலே தொழிலுக்குச் செல்லும் தன்மை சில இடங்களில் அவதானிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

'எனவே, க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத வேண்டிய மாணவர்கள் சிலர் தமது பாடப்பரப்பு முடியாத காரணத்தால் பரீட்சைக்கு தோற்றாமல்விடாமல் அல்லது குறைந்த பெறுபேற்றை எடுக்க முடியும். எனவே, இந்த மாணவர்களுக்கு குறைந்தது நான்கு மாதங்களுக்கு பிறகு ஒரு முற்பரீட்சை முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்வாறு செயற்படுவதன் மூலம் பாடசாலையிலிருந்து மாணவர்கள் இடைவிலகல் தவிர்க்கப்படும்.

'பாடசாலையிலிருந்து மாணவர்கள் இடைவிலகும் போது, சமூகத்தில் ஏற்படுகின்ற சமூகத் தாக்கங்கள் எதிர்காலத்தில் குறைக்கப்படும்' எனவும், அவர் தெரிவித்தார்.

அடுத்ததாக, எதிர்காலத்தில் மாணவர்களுக்கான விசேட கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்தல் அவசியம் எனத் தெரிவித்த அவர், அவ்வாறு செய்யா விடின் சமூகத்தில் ஒரு வெற்றிடம் காணப்படும் எனவும் கூறினார்.

அத்துடன், பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் போது, தொழில்நுட்பத்தை பயன்படுத்தாத மாணவர்கள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், அவர் தெரிவித்தார்.

'கடந்த ஒரு வருடமாக மாணவர்கள் வீடுகளில் தமது நேரத்தை செலவிட்டுள்ளார்கள். அவர்களுடைய உளவிருத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். எனவே மாணவர்களை குழு செயற்பாட்டில் ஈடுபடுவதை பாடசாலை நிர்வாகம் ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும்' என்றார்.

குறிப்பாக, கற்றல் செயற்பாடு விளையாட்டாக இருக்கலாம் எனத் தெரிவித்த அவர், மாணவர்கள் குழுவாக இயங்கி செயற்படுதல் வேண்டுமெனவும் அடுத்ததாக, விளையாட்டுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

பாடசாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுக்கு முன்னைய காலங்களை விட இரண்டு மடங்காக நேரத்தினை விளையாட்டுக்கு ஒதுக்குவதன் மூலம், அவர்களுடைய உளவிருத்தி செயற்பாட்டினை அதிகரிக்க முடியுமென்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .