2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

‘கரவான கருத்துக்களுக்கு கலவரம் தேவையில்லை’

Editorial   / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நான் அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்புவதை நான் அறிவேன். மக்கள் கருத்தும் மகேஸ்வரனின் கருத்துக்களுமே முக்கியம். கட்சிகளின் அனுமதி பெறாத கரவான கருத்துக்களைக் கொண்டோரின் கருத்துக்களைக் கேட்டுக் கலவரம் கொள்ளத் தேவையில்லை” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் உங்களை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த விருப்பம் இல்லாதது பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் கூறியுள்ளார். அது பற்றி உங்கள் கருத்து என்ன என்ற வாராந்த கேள்விக்கு முதலமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நான் இதுவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கவோ சிதைக்கவோ நடவடிக்கைகள் எடுக்கவில்லை. அதன் தலைமைத்துவத்தின் பிழையான நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டவே நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளேன்.

அரசியலுக்கு வருவேன் என்று நான் நினைத்திருக்கவில்லை. ஆனால் இறை செயலால் நான் அரசியலுக்குள் வந்துவிட்டேன். வந்த பின் எனது மக்களின் பேராதரவும் அன்பும் என்னை நெகிழ வைத்துவிட்டன. இதுவரை என்னால் முடிந்தளவுக்கு செய்யக்கூடியவற்றை செய்துள்ளேன். பல விடயங்களை செய்யமுடியாமல் அதிகார வரையறை, ஆட்சி அமைப்பு முட்டுக்கட்டைகள், குழிபறிப்புக்கள் என்று பல தடைகளை எதிர்கொண்டுள்ளேன். அதிகாரம் ஓச்சும் கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு சிலர் பல விடயங்களை செய்ய விடவில்லை. எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, படுகொலைகளை, போர்க்குற்றங்களை எல்லாம் யாருக்கோ  உதவி செய்யும் நோக்கில் எம்மவர் சிலர்  மறைக்க முற்படுவதுபோல் என்னால் மறைக்க முடியாதிருக்கின்றது. உண்மையை உலகம் உணர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கு என்னால் இயலுமானளவு செயற்பட்டிருக்கின்றேன். ஏகோபித்த வடமாகாணசபை இனப்படுகொலைத் தீர்மானம் இதற்கொரு உதாரணம். 

எமது மக்களுக்கான குரலாக நீதிவேண்டி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக தொடர்ந்து குரல் கொடுத்துவருவதுடன் முடிந்தளவு அவர்களின் காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சிகளைப் பல தடைகளுக்கு மத்தியில் எடுத்து வருகிறேன்.

உதாரணமாக, எமக்கான உதவிகளை சிங்கள ஆட்சியாளர்கள் செய்துதர முன்வராமையால் எம் புலம்பெயர் சொந்தங்களிடம் எமக்கான உதவிகளைப் பெற்று  போரினால் நலிவுற்றிருக்கும் எம்மக்களின் துயர்களை துடைக்க முதலமைச்சர் நிதியம் ஒன்றுக்கான ஒப்புதலைத் தரும்படி 4 வருடங்களாக வேண்டி நிற்கிறோம்.  மாகாண சபையின் ஆயுட்காலமும் முடிவுக்கு வருகிறது. ஆனால் இன்று வரை அதற்கான ஒப்புதல் அளிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் செயற்படும் எமது எந்த தமிழ்த் தலைவராவது இதனை வலியுறுத்தி இருக்கின்றார்களா? போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றுங் கிடைக்காது போனாலும் பரவாயில்லை தனியொருவனுக்குப் பெயர் வந்து விடக்கூடாது என்ற மனோபாவத்தின் வெளிப்பாட்டை நான் அவதானிக்கின்றேன். 

இணைந்த வடக்கு - கிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வு என்ற எமது தீர்வுக் கோரிக்கையை இல்லாமல் செய்து தமிழ் தேசிய கோட்பாட்டைச் சிதைக்குந் திட்டமிட்ட நடவடிக்கைகளை எதிர்க்கும் நிலைக்கு நான் கடந்த 4 வருடங்களில் தள்ளப்பட்டிருந்தேன். இவ்வாறான சிதைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக  என்னால் முடிந்தளவுக்குச்  செயற்பட்டு "இணைந்த வடக்கு கிழக்கில்  சுயநிர்ணய உரிமை"  என்ற அரசியல் கருத்து  வினைப்பாட்டை சர்வதேச சமூகம், இலங்கை மத்திய அரசு மற்றும் எமது மக்கள் மத்தியில் மீள நிலைநிறுத்தியுள்ளேன்.

நான் அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்புவதை நான் அறிவேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் இருந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனது பயணம் தொடரவேண்டும் என்பது அவன் சித்தமும் மக்கள் விருப்பமும் போலும். இந்தப் பின்னணியில் நான் என்ன செய்ய? மக்கள் கருத்தும் மகேஸ்வரனின் கருத்துக்களுமே முக்கியம். கட்சிகளின் அனுமதி பெறாத கரவான கருத்துக்களைக் கொண்டோரின் கருத்துக்களைக் கேட்டுக் கலவரம் கொள்ளத் தேவையில்லை?

உள்ளுராட்சி தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு என்னையே காரணம் காட்டுகின்றார்கள். சிலர் தம்மைத் தாமே கண்ணாடியில் பார்த்துக் காரணங்களைக் கண்டு பிடிக்காமல் என்னை வைகின்றார்கள். ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்பு வரக் கூடிய சாத்தியம்  இல்லை. எனவே மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக எம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாகத் தேர்தலில் நிற்கலாம்.  ஆனால் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் மூலோபாய ரீதியாகவும் நடைமுறை அடிப்படையிலும் அவ்வாறு நிற்பதால் பல பிரச்சினைகள் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.  புதிய கட்சி ஒன்றை தொடங்குமாறு பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றார்கள்.  கொள்கை ரீதியாக உடன்படும் அனைவருடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்கின்றார்கள். அதற்குரிய காலம் கனிந்து விட்டதோ நான் அறியேன்.

எமது அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான  பயணப்பாதையைத் தனிநபர்கள் தீர்மானிக்காமல்  அறிவு ஜீவிகளின் பங்களிப்புடன் ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட அரசியல் செயற்பாட்டை இதுவரை காலமும் முன்னெடுத்திருப்போமானால் எம்மிடையே பிளவுகள் ஏற்பட்டிருந்திருக்காது, தெற்கில் எவர் வரப்போகின்றார் என்ன நடக்கபோகின்றது என்ற  மனக்கிலேசங்களுக்கு  உள்ளாக வேண்டியிருந்திருக்காது.  நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் இனமாக இருக்கவேண்டி வந்திருக்காது. எமது பிரதேசங்கள் தொடர்ந்தும் திட்டமிட்ட குடியேற்றங்களால் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்காது. திட்டங்களுக்கு ஏற்ப நிறுவனமயப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுக்கம் சார்ந்த ஒரு அரசியலை மேற்கொண்டு எமது அபிலாஷைகளை வென்றெடுக்க சிவில் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள், சமூகவியலாளர்கள், புத்திஜீவிகள், மகளிர், இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும்” என தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .