2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘காணாமலாக்கப்பட்டவர்களின் இறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது’

Editorial   / 2019 மார்ச் 04 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காணாமலாக்கப்பட்டவர்களின் இறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுமாறு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவரும் முன்னாள் மாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறுத்திக் கட்ட யுத்தம் இடம்பெற்ற கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த போது அவர்களின் காணி உறுதிப்பத்திரங்கள் பலவும் தொலைந்து விட்டன. அதேநேரம் அவர்களில் அதிகமானவர்களது காணிகள் போமிற் காணிகளாவே இருந்துள்ளன.

தற்போது, அந்த மக்களுக்கு வீட்டுத் திட்ட வசதி உள்ளிட்ட சிலவற்றை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அதற்கான பத்திரங்கள் இல்லாததால் அந்த உதவிகள் கிடைக்காத நிலையும் ஏற்பட்டிருக்கின்றன. ஆகையினாலே அந்த மக்கள் தமது காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் தாம் வாழ்ந்த காணிகளுக்கான போமிற் பத்திரங்களை மீளத் தருமாறு கேட்கின்றனர்.

அந்தக் காணிகளுடைய போமிற் பத்திரங்கள் யாருடைய பெயரில் இருந்ததோ அவர் வரவேண்டுமென்று கூறப்படுகின்றது. ஆக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பலர் காணாமலாக்கப்பட்டிருக்கின்றனர்.

அவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களை மீட்டுத் தரவேண்டுமென வலியுறுத்தி அவர்களது உறவினர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந் நிலையில் காணாமல் போனவர் உயிரிழந்தார் என மரணச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டு வந்தால் அந்தக் காணிகளது பத்திரங்கள் தரப்படுமென அதிகாரிகளால் கூறப்படுகின்றது.

சிலர் அவ்வாறு பெறவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறு காணியை காரணம் காட்டி போராடும் மக்களுக்கு மறைமுகமான அழுத்தங்களைப் அரசாங்கம் பிரயோகிக்கின்றது என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X