2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சங்குப்பிட்டி பாலத்தினூடாக மரக்கடத்தல்

Gavitha   / 2015 நவம்பர் 01 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரியின் சங்குப்பிட்டி பாலத்தினூடாக தினமும் பெருமளவு மரங்கள் யாழ்ப்பாணத்துக்கு கடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

மீள்குடியேற்றம் நடைபெற்று கடந்த ஐந்தாண்டுகளில் பூநகரிப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் மற்றும் பிரதேச செயலக மட்டக் கூட்டங்களில், சங்குப்பிட்டிப்பாலம் வழியாக யாழ்ப்பாணத்துக்கு விறகுகூட கொண்டுசெல்லக் கூடாதென்ற கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட்ட நிலையில் பெருமளவிலான பச்சைமரங்கள் சங்குப்பிட்டி வழியாக கொண்டுசெல்லப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.   

பூநகரிப் பிரதேசம், உவராபத்தினை எதிர்கொண்டுள்ள பிரதேசமாகும். மரங்களை அழிப்பதனூடாக பூநகரியில் எஞ்சியுள்ள பகுதிகளும் விரைவாக உவரடையும் ஆபத்துள்ளதன் காரணமாக, பூநகரி பிரதேசத்தில் ஒருமரம்கூட வெட்டக்கூடாதென்ற இறுக்கமான கட்டுப்பாடு, பிரதேச செயலக மட்டத்தில் தீர்மானமாக எடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி நடைபெற்ற சுற்றாடல் சட்ட அமுலாக்கல் கூட்டத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தில் மரங்கள் அழித்தலை கட்டுப்படுத்துதல் என்ற முக்கியமான தீர்மானம் எடுக்கப்பட்டு அதிகாரிகளுக்கான ஆலோசனைகளும் மாவட்டச் செயலரினால் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, வடமாகாண சபையில் சட்டவிரோத கடத்தல்களைத் தடுக்கும் நோக்கில், ஏ- 32 வீதியின் (யாழ்ப்பாணம் - மன்னார்) சங்குப்பிட்டி பாலம் மற்றும் ஏ-9 (யாழ்ப்பாணம் - கண்டி) வீதியின் ஏதாவது ஒரு இடத்தில் பொலிஸ் சோதனைச் சாவடியை அமைத்து, பயணிகள் வாகனங்கள் தவிர்ந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் சந்தேகப்படும்படியான வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கோருவது என்பது தொடர்பில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலும் சங்குப்பிட்டி பாலம் வழியாக நாள்தோறும் மரங்கள் கொண்டுசெல்லப்படுகின்றன.

பூநகரியின் முக்கொம்பன், ஜெயபுரம், கரியாலைநாகபடுவான் ஆகிய காட்டுப்பகுதிகளிலிருந்து அல்லது மன்னாரின் பெரியமடு போன்ற காட்டுப்பகுதியிலிருந்து மரங்கள் கொண்டுசெல்லப்படுகின்றது என்று இப்பகுதி மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.

சங்குப்பிட்டிப்பாலத் தொடக்கத்தில் பொலிஸ் அரண் ஒன்றுள்ள நிலையில் பச்சை மரங்கள் எவ்வாறு யாழ்ப்பாணத்துக்கு கொண்டுசெல்லப்படுகின்றன என்ற கேள்வி எழுகின்றது.

இதுதொடர்பில், இறுக்கமான தீர்மானத்தினை பொலிஸார் நடைமுறைப்படுத்தவேண்டுமென்பது சூழலியலாளர்களின் முக்கிய வேண்டுகோளாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .