2025 மே 21, புதன்கிழமை

‘சட்டவிரோத குடியேற்றங்களை நிறுத்த எம்.பிகளுடன் இணைந்து நடவடிக்கை’

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாணத்துக்கு வெளியில் இருந்து சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்த  அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அதற்கான நடவடிக்கைகளை மாகாண சபை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மாகாணசபையின் 130ஆவது அமர்வு, கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் இன்று (30) நடைபெற்றது.

இதன்போது சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் து.ரவிகரன், முல்லைத்தீவு உட்பட வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் சட்டவிரோத குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார்.

மேலும், இக்குடியேற்றங்கள் ஆக்கிரமிப்புகள், அபகரிப்புகள் தொடர்பில் மாகாண சபையின் குழு ,முல்லைத்தீவில் நேரடியாக ஆய்வு செய்திருந்தது.  அதன் பின்னர் இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு மாகாண சபை எடுத்து வருகின்ற நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பிலும் வினவினார்.

இதற்கு பதிலளிக்கும் போதே, அவைத் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் ஆக்கிரமிப்புகள் நடைபெறுவதாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக அத்துமீறிய தொழில் நடவடிக்கைகள், சட்டவிரோத குடடியேற்றங்கள் நடைபெறுவதாகவும் சபையில் சுட்டிக்காட்டப்பட்டதற்கமைய, சபையின் 27 உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், ஒரு போராட்டமொன்றையும் மேற்கொண்டிருந்தனர்.

“இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற ஆக்கிரமிப்புகள் மற்றும் திட்டமிட்ட சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய மாகாண சபையின் உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்றும் மாகாண சபையில் இடம்பெற்றிருந்தது.

“இதன்போது இத்தகைய விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது” என்றார்.

இதனடிப்படையில் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் பேசியிருக்கிறார் எனத் தெரிவித்த அவர், இந்த விடயங்கள் தொடர்பில், தொடர்ந்து ஜனாதிபதி உள்ளிட்ட அரச தரப்பினர்களுடன் பேசி வருவதாகவும் அதனைத் தடுத்து நிறுத்தவும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஆகவே, தங்களைப் பொறுத்தவரையில் வடக்கு மாகாணத்துக்கு வெளியில் இருந்து கொண்டு வந்து, யாரும் குடியேற்றப்படக் கூடாதென்பதே நோக்கமாக இருக்கிறதெனவும் அத்தகைய குடியேற்றங்களை தாங்கள் ஒரு போதும் அனுமதிக்கவும் மாட்டோமெனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், மாகாணத்தில் இடம்பெறுகின்ற ஆக்கிரமிப்பு, அபகரிப்பு, சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள், திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்பிலும் இதனை ஆவணப்படுத்துவது தொடர்பிலும், முதலமைச்சருக்கு தெரியப்படுத்துவதாக, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .