2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சந்தேக நபர் உண்ணாவிரதம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

புலிகளுடன் தொடர்புகளைப் பேணியவர் என்ற குற்றஞ்சாட்டில் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான சிவராசா ஜெனீபன் (வயது 36), நேற்று செவ்வாய்க்கிழமை (08) முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

2009ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வுப்பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அச்சுவேலி வடக்கைச் சேர்ந்த மேற்படி சந்தேகநபர், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து, அவரது வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவரிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்ட குற்றப்புலனாய்வு அதிகாரி, நீதிமன்றத்தில் ஆஜராகி தனது சாட்சியத்தை அளிக்கவில்லை. இதனால் சந்தேகநபர், தொடர்ந்தும் வழக்குத் தவணையிடப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு, விசாரணைக்காக திங்கட்கிழமை (07) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றப்புலனாய்வு அதிகாரி நீதிமன்றத்துக்கு சமுகமளிக்கவில்லை. இதனால் வழக்கு, 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குறித்த வழக்குத் தவணைக்கு, குற்றப்புலனாய்வு அதிகாரி வருகை தரவேண்டும் என்பதை வலியுறுத்தியே, சந்தேகநபர் உண்ணாவிரதம் இருக்கின்றார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னைய அரசாங்கத்தில் அமைச்சராகவிருந்த காலப்பகுதியில், அவரைக்கொலை செய்வதற்கு இச்சந்தேகநபர் திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. அந்த வழக்கில், அவருக்குப் பிணை வழங்கப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .