2025 மே 17, சனிக்கிழமை

சோதனை சாவடிகள் அகற்றப்படாமை தொடர்பில் விசனம்

எம். றொசாந்த்   / 2019 மே 28 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலை தொடர்ந்து யாழில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ, பொலிஸ் சோதனை சாவடிகள் ஒரு மாத காலமாகியும் அகற்றப்படாமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் தற்போது சுமூகமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் யாழில் அமைக்கப்பட்ட சோதனை சாவடிகளில் யாழ்.வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் சோதனை சாவடியே அகற்றப்பட்டுள்ளது.

காரைநகர் செல்லும் வழியில் பொன்னாலை சோதனை சாவடி, தீவகத்திற்கு செல்லும் வழியில் மண்டைதீவு சந்தியில் உள்ள சோதனை சாவடி, பருத்தித்துறை செல்லும் வழியில் வல்லை சோதனை சாவடி, பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் பாடசாலைக்கு அருகில் உள்ள சோதனை சாவடி, காங்கேசன்துறைக்கு செல்லும் வழியில் மயிலிட்டி சோதனை சாவடி ஆகியவற்றில் தற்போதும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த சோதனை சாவடிகள் ஊடாக செல்லும், பஸ்களில் பயணிக்கும் மக்கள் அனைவரும் சோதனை சாவடிகளில் இறங்கி நடந்து சோதனை சாவடிக்கு செல்ல வேண்டும். அங்கு அடையாள அட்டை,  உடல் மற்றும் கைகளில் உள்ள பொதிகளை இராணுவத்தினர், பொலிஸார் சோதனையிட்ட பின்னர், பஸ்ஸையும் சோதனையிட்ட பின்னரே மேற்கொண்டு அவர்கள் தமது பயணத்தை தொடர அனுமதிக்கப்படுகின்றனர்.

குறித்த சோதனை சாவடிகளில் வயது வேறுபாடின்றி அனைவரும் இறக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. அதனால் வேலைக்கு செல்வோர், வைத்தியசாலைகளுக்கு செல்லும் நோயாளிகள் என பல தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இது தொடர்பில் உரிய தரப்பினர் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .