Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
'தமிழ் மக்கள் இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழக்க விரும்பவில்லை. தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காக இலங்கையர் என்ற அடையாளத்தை இழக்க விரும்பவில்லை. அவர்கள் தமிழர்களாகவும் அதேநேரம், இலங்கையர்களாகவுமே வாழ விரும்புகிறார்கள். எனவே, இலங்கையர் என்ற அடையாளத்தைப் பேணக்கூடிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்' என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
'நம்பகமான போர்க்குற்ற விசாரணையையும், அரசியல் தீர்வையும் அரசாங்கம் வழங்கும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் முதலில் மனப்பூர்வமாக நம்பும் வகையில் அரசாங்கத்தின்; செயற்பாடுகள் அமைய வேண்டும்' என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வ கட்சிகளின் கூட்டத்துக்கு அமைவாக ஈ.பி.டி.பி.கட்சி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
'கடந்த காலத்தில் மாறிமாறி ஆட்சி பீடமேறிய தென் இலங்கை அரசுகள் தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளன.
தாம் வழங்கிய வாங்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளன. ஆனால், இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றமும் அரசியல் தலைமைத்துவங்களின் அணுகுமுறை மாற்றங்களும் புதிய நம்பிக்கைகளை கொடுப்பதாக இருக்கின்றன.
ஆகவே, தற்போதைய அரச தலைமைகள் மீது, தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தொடர்வதற்கு அரசாங்கம், தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வது, காணாமல் போனவர்கள் தொடர்பில் உரிய பரிகாரங்களைக் காண்பது, இராணுவத்தினர் அபகரித்துள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை மீண்டும் உரியவர்களுக்கு ஒப்படைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், வடக்கில் குடிப்பரம்பலின் அடிப்படையிலும், அங்கு வாழும் இனங்களின் விகிதாசாரத்தைப் பேணும் வகையிலும் பொலிஸாரும், படையினரும் அந்தந்த மாவட்டங்களில் நிலைகொண்டிருக்க வேண்டும். எனவே, அதை நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.
ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் உறுதிப்படுத்தப்பட்டு, மேலும் போதுமான வாழ்வாதாரங்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் புலம்பெயர் மக்களை மீளக் குடியமர்த்தும் ஏற்பாடுகள் அந்த மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் வகையில் துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி மேலும் மக்கள் தமது வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதற்கு உதவ வேண்டும். தமிழ் மக்கள் சார்ந்து முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், புனரமைப்புத் திட்டங்கள் அந்த மக்களின் பங்களிப்போடும், அம் மக்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
புலம்பெயர் தமிழ் மக்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். புலம்பெயரும்போது 18 வயதைக் கொண்டிருந்தவர்களுக்கு அந்தந்த நாடுகளில் இருந்தே வாக்களிக்கக்கூடிய உரிமை வழங்கப்பட வேண்டும். அவர்கள் தாயகம் திரும்பி வாழ்வதற்கும், முதலீடுகளை மேற்கொள்வதற்கும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், வாக்களிப்பதற்கும் உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
யுத்த அழிவுகளிலிருந்து மீண்டு எழுவதற்கும், பொருளாதார வளங்களை மேம்படுத்துவதற்கும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago