2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர்கள் சிரமம்

Freelancer   / 2023 ஜனவரி 12 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் பணியாற்றும் ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர்களின் (எம்.எல்.ரி.) மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்கப்படாமையால், அவர்கள் தங்கள் கடமைநேரம் தவிர்ந்த ஏனைய நேரத்தில் கடமையாற்றாமையால்,   நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்க செயலாளர்  சி. ஹரிகரன் தெரிவித்தார்.

இது தொடர்பில், அவர் மேலும் கருத்துக் கூறியதாவது: 

வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளை, வடக்கு மாகாண அதிகாரிகள் வழங்க மறுப்பதன் காரணமாகவே, அவர்கள் தமது வேலைநாள்கள் தவிர்ந்த சனி, ஞாயிறு, விடுமுறை தினங்கள் மற்றும் பிற்பகல் நான்கு மணிக்குப் பின்னர் கடமையாற்றாது, தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்துள்ளார்கள். 

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் எட்டு ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் கடமையாற்ற வேண்டிய இடத்தில், தற்போது ஐந்து  பேர் மட்டுமே கடமையாற்றுகின்றார்கள். இவர்களுக்கு கடந்த ஜூலை மாதத்துக்குப் பிறகு, மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை. ஜனவரி ஐந்தாம் திகதியே அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். 

இதனால், சகல நோயாளர்களும் இலவச சேவையைப் பெறுவதாயின் யாழ். போதனா வைத்தியசாலைக்கு செல்லவேண்டியுள்ளது. அங்குசென்று ஆய்வுகூட சேவையைப் பெறுவது நோயாளர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. 

பொருளாதார நெருக்கடி,  போக்குவரத்து சிக்கல் காரணமாக எமது சங்கத்திடம் உதவிகேட்டு வருபவர்களுக்கு, நாம் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ ஆய்வுகூடப் பரிசோதனை நிலையத்தில் சேவையைப் பெற பண உதவி சங்கத்தின் நிதியிலிருந்து வழங்குகின்றோம். இது குறுகிய வருமானத்தை ஈட்டும் எமது சங்கத்தாலும் தொடர்ந்து வழங்கமுடியாத துர்ப்பாக்கிய நிலைமை உள்ளது.

ஆகவே, விரைந்து சுகாதாரத்துக்குப் பொறுப்பாக உள்ள வடக்கு மாகாண சுகாதார அமைச்சுச் செயலாளர், பிரதம செயலாளர், பதில் சுகாதார அமைச்சராகிய வடக்கு மாகாண ஆளுநர், சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இந்தப் பிரச்சினை, ஏணைய மாகாணங்களை விட, வடக்கு மாகாணத்திலேயே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X