2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

நன்மைகளை பெற்றுத்தருவதில் சிரத்தை உள்ளதா?

Yuganthini   / 2017 ஜூன் 29 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

எமக்கு நன்மைகளை பெற்றுத்தருவதில் மத்திய அரசாங்கத்துக்கு உண்மையில் சிரத்தை உள்ளதா என்பது தொடர்பில் தற்போது மயக்க நிலை ஏற்பட்டுள்ளது என்று இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங்கிடம் தெரிவித்ததாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இடையிலான சந்திப்பு வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில், இன்று (29) இடம்பெற்றது.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“பொருளாதார ரீதியான விருத்திக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக தனது அரசாங்கத்திடம் உதவியை பெற்றுத்தருவதாக கூறினார். யாழில் பல முன்னேற்றங்களை காண்கின்றோம். அரசியல் இன்று வரும் நாளை போகும். ஆனால், அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

“முன்னரே, கொழும்பில் அது தொடர்பாக நான், அவரிடம் பேசினேன். பலாலி விமானதளம் தொடர்பாகவும் மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தி, கே.கே.எஸ்.துறைமுகம் அபிவிருத்தி, தனுஸ்கோடி தலைமன்னார் படகு சேவை ஆகியன தொடர்பாகவும் தாம் டெல்லியுடனும் பேசியுள்ளதாகவும் எமது அரசாங்கத்துடனும் பேசப்போவதாகவும் தெரிவித்தார். இதனைவிட, எமது அபிவிருத்தி செயற்றிட்டங்களைக் குறிப்பிட்டால் அது தொடர்பில் தம்மாலான உதவிகளை செய்வதாக தெரிவித்தார். அவருக்கு அரசியல் பற்றி பேச ஆர்வம் காட்டவில்லை. அபிவிருத்தி தொடர்பாக பேசினார்.

“அத்துடன், இந்திய அரசாங்கத்தால் கோரப்பட்ட புலமைப்பரிசில் திட்டத்தில் 50 பேருக்கு இடமிருந்த போதும், இதுவரை யாழில் 4 பேர் மாத்திரமே விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்த அவர், கூடியளவு இளைஞர் - யுவதிகளை குறித்தத் திட்டங்களில் பங்குபற்றி பயன் பெறுமாறு தெரிவித்தார்.

“எமக்கு நன்மைகளை பெற்றுத்தருவதில் மத்திய அரசாங்கத்துக்கு உண்மையில் சிரத்தை உள்ளதா என்பது தொடர்பில் தற்போது மயக்க நிலை ஏற்பட்டுள்ளதாக அவருக்கு தெரியப்படுத்தினேன்.

“முதலமைச்சர் நிதியம் தொடர்பில் 2,3 வருடங்களாக அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தப்பட்டு அதில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தமையால், அதில் மாற்றங்களையும் ஏற்படுத்தி உரிய திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டும், இதுவரை உரிய நடவடிக்கை இல்லை.

“அவ்வாறான நிதியம் ஆரம்பிக்கப்பட்டால், எமக்கு கிடைக்க வேண்டிய உதவிகளை பெற்று எம்மாலான உதவிகளை வழங்கலாம் என தெரிவித்தேன். அது தொடர்பாக உரியவர்களுடன் பேசுவேன் எனவும் தெரிவித்தார்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X