2025 ஜூலை 21, திங்கட்கிழமை

நிராகரித்த கொள்கைகளை பின் கதவால் கொண்டுவர முயற்சி: சுமந்திரன்

Gavitha   / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

மக்களால் நிராகரிக்கப்பட்ட கொள்கைகளை பின் கதவுகளால் கொண்டு வருவது ஜனாநாயக விரோதச் செயல். திடீரென மூடிய அறைக்குள் பேசி எதுவும் வரப் போவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வலி கிழக்குப் பிரதேச அபிவிருத்தி ஆலோசனைக் குழுக் கூட்டம் வலி கிழக்கு பிரதேச சபையின் புத்தூர் தலைமை அலுவலகத்தில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆ.பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற போது உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய ஆணைக்கு அமைய, அதற்கான தீர்வை நோக்கி கூட்டமைப்பு பயணித்துக் கொண்டிருக்கையில், எவராவது அதனைக் குழப்ப முற்பட்டால் நாம் அதனை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும்.

நாட்டில் நடைபெறுகின்ற அபிவிருத்தியானது எவ்வாறானதாக அமைய வேண்டும், அதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன, என்பது குறித்தும் கடந்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட  வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் வரவு-செலவுதிட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அதனூடாக மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தியானது, நீடித்த நிலையான அபிவிருத்தியாக அமைய வேண்டும்.

இன்று கனிந்து வருகின்ற காலத்தை தவறவிடக் கூடாது' என்று அவர் குறிப்பிட்டார்.

'இவ்வாறான நிலையில், 2016ஆம் ஆண்டு மிக முக்கியத்துவமான வருடமாகும். எதிர்வரும் வருடத்திலே இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமென்று கட்சியின் தலைவர் சம்மந்தன் அறிவித்திருக்கின்றார். அதற்கான முன்னெடுப்புக்கள் தான் தற்போது இடம்பெற்று வருகின்றன.

அதேவேளை தீர்வு வந்தாலும் வரவிட்டாலும், அதற்கிடைப்பட்ட காலத்தில் பொருளாதார ரீதியில் முன்னேறி எமது பிரதேசத்தில் பொருளாதார மீள்எழுச்சியைக் கட்டியெழுப்ப வேண்டும். அதாவது அரசியற் தீர்வுப் பிரச்சனைத் தீர்வுக்காக பயணிக்கின்ற அதே வேளையில், எமது அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்கின்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்' என்று அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .