2025 மே 17, சனிக்கிழமை

மாணவனின் குருதி மாதிரி கொழும்புக்கு

எம். றொசாந்த்   / 2019 மே 29 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவனின் உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிய அவரது குருதி மாதிரி கொழும்புக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது என யாழ்ப்பாணம் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அவரது சகோதரர்கள் இருவரும் ஆரோக்கியமான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியில் தரம் 2 இல் கல்வி பயிலும் சத்தியகரன் அபிகரன் (வயது-7) என்ற மாணவன் வயிற்றோட்டம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (28) உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ நிபுணரால் மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

“மாணவன் இரண்டு வாரங்களுக்கு மேலாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அதிகளவான சேலைன் ஏற்றப்பட்டது. அதனால் அவருக்கு ஏற்பட்ட கிருமித் தொற்றுத் தொடர்பில் துல்லியமான முடிவை உடற்கூற்றுப் பரிசோதனையின் ஊடாக கண்டறிய முடியாது.

அவரது குருதி மாதிரியை ஆய்வுக்குட்படுத்தியே கிருமியின் தாக்கம் தொடர்பில் கண்டறிய முடியும்” என சுகாதார துறையினரால் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மாணவனும் அவரது சகோதரர்களும் உட்கொண்ட முட்டையில் விஷக் கிருமியின் தாக்கம் உள்ளது. அதனால் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு சுகயீனத்துக்குள்ளாகினர் என்று தெரிவிக்கப்பட்டது.

கோழியின் எச்சங்களில் “சல்மனெல்ல” பற்றீரியா உருவாகும். அந்த பற்றீரியா முட்டைக் கோதில் தொற்றுவதுக்கு வாய்ப்பிருக்கிறது. முட்டைக் கோது அகற்றப்படும் போது பற்றீரியா முட்டையில் சேர்வதால் உணவில் அதன் தாக்கம் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. அந்தத் தொற்று மாணவனுக்கு ஏற்பட்டதா? என்பது தொடர்பில் கண்டறிய அவரது குருதி மாதிரி கொழும்புக்கு அனுப்பிவைக்கப்படுகிறது என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

கோப்பாயைச் சேர்ந்த மாணவனும் அவரது சகோதரர்கள் இருவரும் வயிற்றோட்டம் காரணமாக கடந்த 10 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கிசிச்சைக்காகச் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 17 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 7 வயது மாணவன் நேற்று (28) காலை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .