Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2018 பெப்ரவரி 26 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
“முன்னாள் புளொட் உறுப்பினரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள், இராணுவத்தினருக்கு 1998 ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருந்தன. எனினும் அவை காணாமற்போயிருந்ததாக இராணுவத்தலைமையகம் தெரிவித்துள்ளது” என யாழ்.பொலிஸார் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
முன்னாள் புளொட் உறுப்பினர் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு, விசாரணைக்கு இன்று (26) எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பொலிஸார் குறித்த விடயத்தை நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.
புளொட்டின் முன்னாள் உறுப்பினரான மானிப்பாயைச் சேர்ந்த சிவகுமார் (வயது 55) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தார். அந்த வீட்டில் முன்னர் புளொட் அலுவலகம் இயங்கி வந்தது.
அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அங்கிருந்து வெளியேற புளொட்டின் முன்னாள் உறுப்பினர் மறுப்புத் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், அவரை வெளியேற்றுமாறு கோரி, வீட்டு உரிமையாளர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், கடந்த டிசெம்பர் மாதம் 19 ஆம் திகதி அந்த வீட்டிலிருந்த முன்னாள் புளொட் உறுப்பினரை வெளியேற்ற யாழ். மாவட்ட நீதிமன்றப் பதிவாளர், யாழ்ப்பாணம் பொலிஸாருடன் சென்றிருந்தார்.
அங்குள்ள பொருட்களை பொலிஸார் வெளியேற்றிய போது, அங்கிருந்த அலுமாரி ஒன்றுக்குள் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் காணப்பட்டன.
பயன்படுத்தத்தக்க ஏ-கே 47 துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தப்படும் கோல்ட்ஸர் 2, ரவைகள் 396, கைத்துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தும் மகஸின்கள் 3, வோக்கிகள் 2 மற்றும் 2 வாள்கள் மீட்கப்பட்டன.
அதனையடுத்து புளொட்டின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சந்தேகநபர் இன்று (26) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
இதன்போது, பொலிஸார், “சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் இராணுவத் தலைமையகத்திடம் விளக்கம் கோரப்பட்டது.
1998 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 4 ஆம் திகதி இராணுவத்தின் காலாற்படைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகள் காணாமற்போயிருந்தன. அந்த ஆயுதங்களே தற்போது மீட்கப்பட்டுள்ளன. அவை சந்தேகநபர் வசம் சென்றமை தொடர்பில் இராணுவத்துக்கு தெரியாது என இராணுவத் தலைமையகம் கடிதம் அனுப்பி வைத்துள்ளது” என தெரிவித்தனர்.
எனவே, கடிதத்தின் பிரதியை வழக்கேட்டில் இணைக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன், சந்தேகநபரின் விளக்கமறியலை எதிர்வரும் 12ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .