2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவு கடற்றொழில் திணைக்களத்தில் முற்றுகைப் போராட்டம்

Editorial   / 2018 ஜூலை 24 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

 

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி, மாவட்டக் கடற்றொலில் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மீனவர்களும் இணைந்து, முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழில் திணைக்கள அலுவலகத்தை நேற்று (24) முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

இதில், வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனும் கலந்துகொண்டிருந்தார்.

முல்லைத்தீவு மாவட்டக் கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் கூட்டமொன்று, இன்று (24) காலை 10  மணியளவில், கள்ளப்பாடு புனித அந்தோனியார் ஆலயத்துக்கு அருகிலுள்ள மீனவ மண்டபத்தில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழில் அமைப்பின் தலைவர் ஜெயா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன், வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரதாபன், கடற்படை அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களப் பரிசோதகர், கடற்தொழில் அமைப்புகள் மற்றம் கடற்றொழிலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில், இறுதித் தீர்மானம் எடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில், எதுவித முடிவுகளும் எட்டப்படாத நிலையிலேயே, மேற்படி முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுமார் ஒரு மணிநேரம், அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்த போராட்டக்காரர்கள், அலுவலகத்துக்கு வருகைதந்த கடற்றொழில் திணைக்கள அதிகாரியை மறித்து, தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அத்துடன், ஆயிரத்துக்கும் அதிகமான கடற்றொழிலாளர்கள் கையெழுத்திட்ட மகஜரையும் கையளித்தனர்.

அந்த மனுவில், முல்லைத்தீவு மாவட்டக் கடற்பரப்பில், சட்டவிரோதத் தொழில் நடவடிக்கை மிக மோசமாக நடைபெற்று வருகின்றதென்றும் இது விடயமாக, பல தடவைகள் தெரியப்படுத்தியும், இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால், கடற்றொழிலாளர்கள் வறுமையில் வாடுவதாகவும் எனவே, வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடிப்பது, வெடி வைத்து மீன்பிடித்தல், லைலா வலை மீன்பிடித்தல், சுருக்குவலை மூலம் மீன்பிடித்தல். சங்கு பிடித்தல், அட்டை பிடித்தல் போன்ற தொழில் நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டுமென்றும், இதற்காகக் கொடுக்கப்பட்ட அனுமதிகளும் உடனடியாக இரத்துச் செய்யப்பட வேண்டுமென்று, மனுவினூடாக வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .