2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வடக்கில் பௌத்த மயமாக்கல் என்பது 'கலாசாரப் படுகொலையே'

George   / 2016 ஓகஸ்ட் 16 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வடக்கில் இடம்பெற்றுவரும் சிங்களக் குடியேற்றம், இன அழிப்பின் ஓர் வடிவமாகவே பார்க்கிறோம். பௌத்த மயமாக்கலை ஓர் கலாசார படுகொலையாகவே நாம் நோக்குகின்றோம். அதனால், இதற்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்' என யாழ்ப்பாணத்துக்கு திங்கட்கிழமை (15) விஜயம் மேற்கொண்ட அமெரிக்க தூதுக்குழுவிடம், மாகாணசபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உயர்ஸ்தானிகர் தலைமையிலான தூதுக்குழுவினர், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களைச் சந்தித்து புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிவதற்கான சந்திப்பை மேற்கொண்டிருந்தனர்.

சுமார்; 1 ½  மணிநேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் சர்வேஸ்வரன் மேலும் கூறுகையில், 'தொடர்ந்து வந்த ஆட்சிகள் வடக்கு-கிழக்கை சிங்கள பௌத்த மயமாக்கும் செயற்பாடுகளையே தொடர்ந்தன. எனவேதான், ஆயதப் போராட்டம் முனைப்பு பெற்றது. யுத்தம் முடிந்ததும் முன்னைய அரசு வேகவேகமாக வடக்கு-கிழக்கை சிங்கள பௌத்த மயமாக்கும் திட்டங்களை செயற்படுத்தத் தொடங்கியது. இன்றைய ஆட்சி அதனை மேலும் பரவலாகத் தொடர்கிறது' என்றார்.

'இனிமேல் ஆயுதப் போராட்டத்துக்கு வாய்ப்பில்லை என்பது அரசாங்கத்துக்கு நன்கு தெரிந்திருந்தும். தேசிய பாதுகாப்பை விட்டுக்கொடுக்க முடியாது' என திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் இராணுவ தளங்களை விஸ்தரிப்பதும், பலப்படுத்துவதும் தொடர்கிறது.

வடக்கு-கிழக்கில் இராணுவத்தின் தேவை இல்லாத இக்காலகட்டத்தில் இவற்றை தொடர்வது ஒருபுறம் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வழங்க முடியாது எனவே கிளர்ச்சி செய்வார்கள் எனவே அதை அடக்க இராணுவம் பலமாக இருக்க வேண்டும் என்கின்ற உள்நோக்கத்தைத் தவிர இதற்கு வேறு காரணங்கள் இருக்கமுடியாது.

மறுபுறம் வடக்கு-கிழக்கை சிங்கள பௌத்தமயமாக்கும் வேலைத்திட்டங்களை தடையின்றி நடைமுறைப்படுத்தவும் பாதுகாக்கவும் அவர்களுக்கு இங்கு படையினர் தேவைப்படுகின்றனர்.
ஒரு புறம் தீர்வு தொடர்பாக தெளிவின்றி பேசிவரும் அரசாங்கம், மறுபுறம் படைகளை வைத்து வடக்கு-கிழக்கை வேகமாக சிங்கள பௌத்த மயப்படுத்தி வருவதானது எத்தகைய தீர்வுத்திட்டத்தையும் அர்த்தமற்றதாக்கி, சிங்கள பௌத்தத்துக்குள் தமிழ் அடையாளங்களைக் கரைத்துவிடும் உள்நோக்கமுடையதாகும்.

எனவே, நடைபெறும் சிங்களக் குடியேற்றம், இன அழிப்பின் ஓர் வடிவமாகவே நான் பார்க்கின்றேன். பௌத்த மயமாக்கல் ஓர் கலாசார படுகொலையாகவே நாம் நோக்குகின்றோம். எனவே, உங்கள் நாட்டு இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் ஓர் நிரந்தரத் தீர்வை எட்டும்வரை, இலங்கை அரசு வடக்கு-கிழக்கில் நடாத்தி வருகின்ற சிங்களக் குடியேற்றங்களையும் பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்த வேண்டும்.

இன்று அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்படும் காணாமல் போனோருக்கான அலுவலகம், இலங்கையில் இருக்கும் மனித உரிமை ஆணைக்குழுபோல் செயலற்ற ஒன்றாக இருக்கக்கூடிய அபாயம் உள்ளது.
இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. எனவே ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையின் கிளை கொழும்பில் திறக்கப்படவேண்டுமென ஐ.நா மனிதவுரிமைப் பேரவை கூறியதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X