2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வாள்வெட்டு வன்முறைச் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 19 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டு வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா நேற்று (18) உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக பெற்றோல் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. அத்துடன், சுன்னாகம் பொலிஸ் நிலையம் இடம்மாற்றப்படவுள்ள வளாகத்துக்கும் கடந்த வாரம் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் வன்முறைக் கும்பல்களைத் தேடும் நடவடிக்கையை திங்கட்கிழமை (17) இரவு தொடக்கம் செவ்வாய்க்கிழமை (18) அதிகாலைவரை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர். இதன்போது 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வான், மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மற்றும் 6 வாள்கள் என்பன மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட அனைவரும் 20 மற்றும் 21 வயதுடையவர்கள். அரியாலை, மானிப்பாய், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் கூறியிருந்தனர்.

புன்னாலைக்கட்டுவனில் வீடுபுகுந்து மிரட்டி பணம் பறித்துச் சென்றமை, அரியாலையில் வங்கி முகாமையாளரின் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதல், நெல்லியடியில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டமை, பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட கொள்ளை மற்றும் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என குற்றச்சாட்டுக்கள் சந்தேகநபர்கள் மீது முன் வைக்கப்பட்டு, சந்தேகநபர்கள் 9 பேரும் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் நேற்று (18) மாலை முற்படுத்தப்பட்டனர். அவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகி, சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கக் கோரி விண்ணப்பம் செய்தனர்.

எனினும் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க பொலிஸார் ஆட்சேபனை தெரிவித்தனர். இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .