2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

‘விக்னேஸ்வரன் நீதிமன்றம் சென்றால் வரலாற்றில் கரும்புள்ளி’

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

“வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் இன்னொரு தடவை நீதிமன்றத்துக்கு செல்வாரானால் அது தமிழர்களுக்கு கிடைத்த முதலாவது தன்னாட்சி சபையான மாகாண சபையின் வரலாற்றில் கரும்புள்ளியாக மாறும். ஆகவே, மாகாண அமைச்சரவை விவகாரத்தை முதலமைச்சர் 18ஆம் திகதிக்கு முன்பதாக சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும்” என வட மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.

வட மாகாணசபையின் 131ஆவது அமர்வு பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இன்று நடைபெற்றிருந்தது. இதன்போது வழக்கம்போல் மாகாண அமைச்சர்கள் யார் எனக் கேள்வி எழுப்பப்பட்டு குழப்பம் உருவானது. இந்நிலையில் முதலமைச்சர் அவையில் இருக்கும்போதே கருத்து தெரிவித்த அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம், மேற்படி கோரிக்கையை முதலமைச்சருக்கு முன்வைத்துள்ளார். இதன்போது மேலும் சீ.வி.கே சிவஞானம் கூறுகையில்,

“மாகாண சபை அமைச்சர்கள் விவகாரம் மற்றும் அதனால் முதலமைச்சர் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் நீதிமன்றம் சென்றமை போன்ற விடயங்கள் தமிழர்களுக்கு கிடைத்த முதலாவது தன்னாட்சி சபையான மாகாணசபை வரலாற்றில் கரும்புள்ளியாக மாறவுள்ளது. இந்த மண்ணில் நான் அரச அதிகாரியாக மட்டும் இருக்கவில்லை.

தமிழர்களின் விடுதலை நோக்கிய பயணத்தில் பல்வேறு வழிகளில் என்னுடைய அழுத்தம் திருத்தமான பங்களிப்பு இருந்திருக்கின்றது. அதனால் உயிராபத்துக்களையும் சந்தித்தவன் நான். அந்தவகையில் இந்த அமைச்சர் சபை குழப்பத்தை அவைத்தலைவர் என்பதற்கும் அப்பால் சீ.வி.கே. சிவஞானமாக தீர்த்து வைப்பதற்கு பங்களிக்கும் பொறுப்பு எனக்குள்ளது.

அந்தவகையில் இதற்கு முன்னரும் ஆளுநர், முதலமைச்சர் ஆகியோருடன் சுமூகமாக பேச்சுவார்த்தைகளை நடாத்தி இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயன்றேன். ஆனால் அது சாத்தியப்படவில்லை.

இந்நிலையில் இன்றளவும் இந்த சபையில் 29.06.2018ஆம் திகதி தொடக்கம் பொறுப்புகூறும் சட்டவலுவுள்ள அமைச்சர் சபை இல்லை. இந்த நிலை தொடர வேண்டுமா என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டியது கட்டாயம். வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் மீண்டும் ஒருதடவை நீதிமன்றத்துக்கு செல்வதை நான் விரும்பவில்லை.

ஆகவே, 18ஆம் திகதிக்கு முன்னதாக இந்த அமைச்சர் விவகாரம் குறித்து முதலமைச்சர் தீர்வைக் காண வேண்டும். குறிப்பாக முதலமைச்சருடைய நற்பெயருக்கு குந்தகம் இல்லாமல் அல்லது கௌரவத்தை பாதிக்காமல் இருக்கும் அமைச்சர் சபையை இராஜினாமா செய்துவிட்டு உடனேயே புதிய அமைச்சர் சபையை நியமனம் செய்யுங்கள்.

இதற்காக ஆளுநருக்கும் முதலமைச்சருக்குமிடையிலான தொடர்பாடலை நானே முன்வந்து செய்து கொடுக்கிறேன். மேலும் இதை முதலமைச்சர் செய்கின்றபோது டெனீஸ்வரன் இடைப்பட்ட காலத்துக்கான சம்பள நிலுவையை கேட்பார் என நியமான ஐயப்பாடு இருக்குமானால் டெனீஸ்வரன் அந்த சம்பள நிலுவையை கேட்கமாட்டார் என்பதை இந்த சபை முன்னிலையில் உத்தரவாதமாக முதலமைச்சருக்கு கொடுக்கிறேன். எனவே முதலமைச்சர் இந்த விடயத்தை சுமுகமாக தீர்த்துக் கொள்ளவேண்டும்” என்றார்.

தொடர்ந்து முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் பதிலளிக்கையில், இங்கு பேசப்படும் பல விடயங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் இருக்கிறது. இதற்கு காரணம் சபையில் பேசப்படும் விடயங்களை நீதிமன்றில் கூட கேள்விக்குட்படுத்த இயலாது என உள்ளபோதும் நான் இங்கு பேசிய விடயங்கள் நீதிமன்ற அவமதிப்பாக அங்கே காட்டப்பட்டுள்ளது. ஆகவே இந்த விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து பதிலளிப்பேன். இப்போது பேசாதிருப்பதற்கு அதுவே காரணமென்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .