2025 மே 21, புதன்கிழமை

விசாரணைகள் மீள ஆரம்பம் : ஊடகவியலாளரும் ஐவரும் கொழும்புக்கு அழைப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

 

பயங்கரவாதக் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் உட்பட அறுவர், விசாரணைக்காகக் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலுள்ள பயங்கரவாதக் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவில், இது தொடர்பான விசாரணைகள், எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், எதிர்வரும் 22ஆம் திகதி, ஊடகவியலாளர் உதயராசா ஷாலினை, விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத் திருவிழாவின் இறுதி நாளான பூங்காவன உற்சவத்தின் போது, வடக்கு - கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து, தமிழீழ வரைபடத்தை ஒத்த அலங்காரத்தில், சுவாமி வீதி வலம் வந்திருந்தது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாகவே, குறித்த ஊடகவியலாளர் பயங்கரவாதக் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவருடன், இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள், ஆலய அர்ச்சகர் ஆகியோரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, அனைவரது வீட்டுக்கும், நேற்று (11) சென்ற பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினர், விசாரணைக்காக கொழும்புக்கு வருமாறு, அழைப்புத் துண்டுகளைக் கையளித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில், காங்கேசன்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், மானிப்பாய், யாழ்ப்பாணம் பொலிஸார், கோப்பாய் இராணுவத்தினர் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இறுதியாக, யாழ்ப்பாணப் பொலிஸாரால் இந்து இளைஞர் மன்றத்தினர் நிர்வாக சபையின் தலைவர், செயலாளர் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, இவ்வாறான சம்பவம் இனிவரும் காலங்களில் நடைபெறக் கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்டு, விசாரணைகளை முடிவுறுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மீளவும், எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், அன்றைய தினத்தில் இருந்து ஆலய உறுப்பினர்கள், அர்ச்சகர்கள் அழைக்கப்பட்டுள்ள அதேவேளை, 22 ஆம் திகதி ஊடகவியலாளர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த வரைபடம் தமிழீழத்தை நோக்கமாக கொண்டு அலங்கரிக்கப்பட்டதல்லதெனவும், தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களே அடையாளப்படுத்தப்பட்டுள்ளனவெனவும், ஆலயத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், இதில் எந்த உள்நோக்கமும் இல்லையெனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், குறித்த ஆலய நிர்வாகத்தில், குறித்த ஊடகவியலாளர் இல்லாத போதிலும், விசாரணைக்காக அழைக்கப்பட்டு உள்ளார்.

இது தொடர்பில், ஊடகவியலாளர் உதயராசா ஷாலின் கருத்துத் தெரிவிக்கையில், இந்து இளைஞர் மன்றத்திலோ, ஆலய நிர்வாக சபையிலோ உறுப்பினராக தான் இல்லையெனவும், தான் எதற்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதெனத் தெரியவில்லையெனவும் குறிப்பிட்டார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .