2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

விழாக்கள் என்ற போர்வையில் பணம் கொள்ளையடிக்கும் அதிகாரிகள்

George   / 2017 ஜனவரி 06 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்ஜெகநாதன்

'வடபுலத்தில் போருக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள பல்வேறு அவலங்களை வடபுலம்சார்ந்த கொடையாளர்களும், வெளிநாடுகளில் வாழும் கொடையாளர்களும் பல வழிகளிலும் நிவர்த்திசெய்து வரகின்றமை யாவரும் அறிந்த உண்மை. அத்தகைய கொடையாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

ஆனால் வடக்கு மாகாண கல்விப்புலம் சார்ந்த சில அதிகாரிகள் அத்தகைய கொடையாளர்களிடம் பெருந்தொகைப் பணங்களைப் பெற்று தமது சட்டைப் பைகளை நிரப்புவது வடபுலத்தில் சாதாரணமாகிவிட்டது.

இத்தகைய செயற்பாடுகள் குறித்து வடமாகாணக் கல்வி அமைச்சிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளதோடு, உரியவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்' என தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

'வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட பல்வேறு வேலைத்திட்டங்களும், வாழ்வாதார உதவிகளும் உரிய அமைச்சுகளுக்கு ஊடாக முறையாக வழங்கப்படுவதும், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற பிரமாண அடிப்படையிலான நிதிகூட உரிய திணைக்களங்களுக்கு ஊடாக பயனாளிகளுக்கு வழங்கப்படுவதனையும் நாம் அனைவரும் அறிந்தவர்களாக உள்ளோம்.

ஆனால் வடக்கு மாகாணத்தில் மக்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் அவர்களின் நிலைகளை அறிந்து பேருதவி புரிகின்ற பெருங்கொடையாளர்களிடம் கல்வி அமைச்சுக்கு உட்பட்ட சில அதிகாரிகள் பெருந்தொகைப் பணங்களைப்பெற்று, அவற்றை தமது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்துவது மட்டுமன்றி எவ்வித அனுமதியும் இல்லாமல் அவற்றைச் செலவுசெய்து சீரழிப்பதனை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

வடமாகாண கல்வி அமைச்சக்கு எம்மால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளவை தொடர்பாக விசாரணைசெய்து உரியவர்களுக்கு தண்டனைவழங்கி, இனிமேல் அத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவேண்டும்.

இதற்கான தீர்ப்பு உரிய முறையில் வழங்கப்படாதவிடத்து குறித்த அதிகாரிகளை நீதிமன்றம் கொண்டுசெல்ல நேரிடும்.

அதுமட்டுமன்றி கொடையாளர்கள் மிகவும் அவதானத்துடன் தமது நன்கொடைகளை வழங்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X