2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

’கதிர்காமத்தில் யாழ். யாத்திரிகர்களுக்கு தங்குமிடம் வேண்டும்’

George   / 2017 ஜூன் 05 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“கதிர்காமத்தில் தமிழ் மக்களது பாரம்பரியங்கள் மற்றும் அவர்களது மடலாயங்கள் அழிக்கப்பட்டமை காரணமாகவே, யாழ்ப்பாணத்துக்கும் கதிர்காமத்திற்கும் இடையிலான உறவில் இடைவெளி ஏற்பட்டது” என, தெல்லிப்பழை துர்கா தேவஸ்தானத்தின் தலைவர் ஆறுதிருமுகன் தெரிவித்துள்ளார்.

“அத்துடன், கதிர்காமத்தில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் யாத்திரிகள் தங்குமிடம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான காணியை கதிர்காம ஆலய நிர்வாகம் வழங்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். மாவட்டத்துக்கு நேற்று  விஜயம் மேற்கொண்டிருந்த கதிர்காமம்  முருகன் ஆலயத்தின் தலைமை மதகுரு டி.பி.குமாரகே, நல்லூர் ஆலயத்துக்குச்  சென்று தரிசனம் செய்ததுடன், நல்லை ஆதீன முதல்வர் மற்றும் ஆறுதிருமுகன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலின் போது, டி.பி.குமாரகேவிடம் இதனைக் கூறிய  ஆறுதிருமுகன், தொடர்ந்து கூறுகையில், யாழ்ப்பாணத்துக்கும் கதிர்காமத்துக்கும் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. எனினும் இந்தத் தொடர்பு 1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் குறைவடைற்து, இடைவெளி ஏற்படத் தொடங்கிவிட்டது.

“இதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக கதிர்காமத்தில் காணப்பட்ட இராமகிருஷ்ணன் மடத்தை, அரசாங்கம் எடுத்துக்கொண்ட பின்னர், தமிழ் மக்கள் அங்கே செல்வதை குறைத்துக்கொண்டார்கள். இந்து கலாசார அமைச்சு அங்கே ஒர் மடத்தை அமைத்திருந்தாலும் தென்பகுதி மக்களே முன் பதிவுகளை செய்து கொள்வதால், தமிழ் மக்கள் அங்கே வந்து தங்குவதற்கு இடம் இல்லாத நிலை காணப்படுகின்றது.

“கதிர்காம வாசலில் 'ஓம் முருகா' என தமிழில் வாசகம் காணப்பட்டது. ஆனால், தற்போது 'ஓம்' என்றை சொல்லி நீக்கிவிட்டார்கள். அதேபோன்று கதிர்காம கந்தன் மீது பன்னிரண்டாம் நூற்றாண்டில் பாடப்பட்ட திருப்புகழை அங்கே பாடுவதை தற்போது நிறுத்திவிட்டார்கள். தமிழ் மக்கள் மலையேறுவதற்கு சென்றால், அங்கே இருக்கும் வாகன ஓட்டுநர்கள் கட்டுப்பாடற்ற முறையில், வாடகை பணம் வசூலிக்கின்றார்கள்.

“அகில இலங்கை இந்து மாமன்றம், யாத்திரிகர் மடத்தை அமைப்பதற்கு கதிர்காம ஆலய நிர்வாகம் காணியொன்றை வழங்க வேண்டும். அத்துடன், கதிர்காம கந்தனது அற்புதங்கள் பெருமைகள் ஆய்வுகள் தொடர்பான தமிழ் புத்தகங்களை அங்கே காட்சிப்படுத்த வேண்டும்.

ஆலயத்தின் வாசகங்களையும் அறிவித்தல்களையும் தமிழ் மொழியிலும் காட்சிப்படுத்த வேண்டும். அத்துடன், யாழ்ப்பாணத்தில் இருந்து ரயில் மூலம் பக்கதர்கள் கதிர்காமத்தை அடைவதற்கு வசதியாக, ரயில் சேவை ஒழுங்குகளையும் கதிர்காம ஆலய நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

இதற்கு பதிலளித்த டி.பி.குமாரகே,“யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து மதத் தலைவர்கள், கதிர்காமத்துக்கு வந்து அங்குள்ள பிரச்சனைகள் தொடர்பில் நேரடியாக பேச வேண்டும். எனக்கு முன்னர் பொறுப்பில் இருந்தவர்களால், தமிழர்களுக்கு கதிர்காமத்தில் குறைபாடுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. நான் அவற்றை தீர்க்கவே முயல்கின்றேன். அகில இலங்கை இந்து மாமன்றத்துக்கு ஒரளவு முற்றுப்பெறும் நிலையில் உள்ள 125அறைகள் கொண்ட கட்டத்தை வழங்குவதற்கு தயாராகவுள்ளோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X