2025 ஜூலை 16, புதன்கிழமை

'தலையாட்டியை ஆட்டவைத்து, மகனைப் பிடித்துச் சென்றனர்'

George   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

தலையாட்டியின் பின்னால் நின்ற சிப்பாய், தலையாட்டியின் கால்களில் கம்பியால் குத்தியதும், தலையாட்டி வலியால் தலையசைக்கும் போது, முன்னால் நின்ற எனது மகனை இராணுவம் பிடித்துச் சென்றது என நாவற்குழியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் சாட்சியமளித்தார்.

காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நல்லூர் பிரதேச செயலகத்துக்குட்பட்டவர்கள் சாட்சியமளிக்கும் அமர்வு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்றது. இதில் சாட்சியமளிக்கும் போதே சின்னதம்பி இவ்வாறு கூறினார்.

'எனது மகன் சிவகுமார் (பிடித்துச் செல்லப்படும் போது வயது 32) திருமணம் முடித்தவர். தச்சுவேலை செய்து வந்தார். 1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி சாவகச்சேரி, கைதடி நாவற்குழிப் உள்ளிட்ட பகுதியில் நாவாற்குழி முகாம் இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு, ஆண்கள் - பெண்கள் என தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு சாவகச்சேரி பிரதேச சபை மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு நின்றிருந்த 4 தலையாட்டிகள் முன்னிலையில் அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனது மகன், முதல் மூன்று தலையாட்டிகளுக்கு முன்பாக சென்ற போது, 3 தலையாட்டிகளும் தலையை ஆட்டவில்லை. 4ஆவது தலையாட்டியும் தலையை ஆட்டாமல் நின்றார். இதன்போது, தலையாட்டிக்கு பின்னால் நின்றிருந்த இராணுவச் சிப்பாய் தலையாட்டியின் காலில் கம்பியால் குத்தினார். 

இதன்போது, தலையாட்டி வலியால் அசைந்தபோது, அடையாளம் காட்டப்பட்டார் என எனது மகனை பிடித்துச் சென்றனர்.

இத்தனையும் அங்கு நின்று அவதானித்த நான், அங்கு நின்ற இராணுவத்தினரிடம் நியாயம் கோரினேன். எனினும், அவர்கள் எனது மகனை வாகனத்தில் ஏற்றிச் சென்றுவிட்டனர். இது தொடர்பில் எனது மகனைப் பிடித்துச் சென்ற நாவற்குழி முகாமின் பொறுப்பதிகாரி கொமாண்டர் துமிந்தவுக்கு கடிதம் எழுதியிருந்தேன். எனினும், இதுவரையில் எவ்வித பயனும் இல்லை என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .